நெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

327 0

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நாளைக்குள் (இன்று) அகற்ற வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிய தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

காந்தியடிகளை தேசப்பிதாவாக ஏற்றுக்கொண்ட ஒரு மாநில அரசு, மதுக்கடைகளை மூடிவிட்டால் அரசு நிர்வாகத்தையே நடத்த முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது. மதுக்கடைகளை மூடிவிட்டால் ஆட்சி நடத்த வருவாய் இருக்காது என்று கூறி மீண்டும் மதுக்கடைகளை நடத்த துடிப்பதைவிட, தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகுவது தான் சரியானதாக இருக்கும்.

மது விற்பனையால் லாபம் கிடைக்கிறது என்பதற்காக மதுக்கடைகளை நடத்துவதை ஏற்கமுடியாது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “அரசுக்கு வருவாய் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சாலை விபத்துகளில் மக்கள் உயிரிழப்பதை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறதா? ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தனிநபர் மது அருந்தி விட்டு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டால், அவரது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படும் என்பதாவது தெரியுமா?” என்றும் சரமாரியாக வினா எழுப்பினார்கள். நீதிபதிகள் எழுப்பிய வினாக்கள் அர்த்தமுள்ளவை; பாராட்டப்பட வேண்டியவை.

எனவே, இதற்குப் பிறகும் மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் குறைந்துவிடும் என்பதையே தமிழக அரசு மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கக்கூடாது. தமிழகத்தின் இன்றைய தேவை முழு மதுவிலக்கு என்பதால் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டவாறு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள 3,321 மதுக்கடைகளையும் தமிழக அரசு உடனடியாக மூடவேண்டும் அடுத்தகட்டமாக மீதமுள்ள மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடை முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.