தேர்தல் முடிவுகளை ஜோதிடர்கள் கணிக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்

425 0

தேர்தல் முன் முடிவுகளை ஊடகங்களை தொடர்ந்து ஜோதிடர்களும் கணிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்று மத்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

ஆனால், முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும்போதே, சில தொலைக்காட்சிகளில் முடிவுகள் குறித்து, ஜோதிடர்களை வைத்து கணிப்புகளை வெளியிட்டன. இது குறித்து, தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புகார்களை விசாரித்த தேர்தல் கமிஷன், ஜோதிடர்கள் தேர்தல் முன் முடிவுகளை கணிப்பதற்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், ”தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு புரம்பானது. அப்படி வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.