“சுதந்திரம், சமத்துவம், அனைவருக்குமான நீதி ” ஈழத்தீவில் உண்டா?

365 0

உலகெங்கிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 10, “மனித உரிமை தினம் “ என கொண்டாடப்படுகிறது.  1914லிருந்து 1918 வரையில் முதலாம் உலக போரையும், 1939லிருந்து 1945 வரை இரண்டாம் உலக போரையும் உலகம் சந்தித்தது.

இதையடுத்து இதே போன்ற நிலை மீண்டும் தோன்றுவதை தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஒன்றுபட்டு பல முடிவுகளை எடுத்தன.அதன் ஒரு தொடர்ச்சியாக 1948ல் டிசம்பர் 10 அன்று, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐ.நா. பொதுச்சபை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற சந்திப்பில் ஏற்று கொண்டது. தொடர்ந்து 1950ல் இந்த பிரகடனம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து ” டிசம்பர் 10 “மனித உரிமை தினம் “ என கொண்டாடப்படுகிறது.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை உரிமைகளை உணர்ந்து அவற்றை கோருவதற்கும், எந்த வித்தியாசங்களும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்குமான நோக்கத்துடன் மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது.

உலகளாவிய மனித உரிமை பிரகடனம் (UDHR) மக்களிடையே இனம், நிறம், மதம், பாலினம், மொழி, நாடு உள்ளிட்ட எந்த வித்தியாசமுமின்றி மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.இஸ்ரேல்-ஹமாஸ் போர், ரஷியா-உக்ரைன் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம், சூடான் உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட உலகளாவிய பதட்டமான சூழ்நிலையில் மனித உரிமைகளுக்கான அவசியம் மேலும் வலுவடைந்துள்ளது.

பிரகடனப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இது குறித்து பேசிய ஐ.நா. கூட்டமைப்பின் தலைவர் வால்கர் டர்க் (Volker Turk), “உலகம் பல சிக்கல்களாலும், நெருக்கடியாலும் சூழப்பட்டிருந்தாலும் மனித உரிமைகள் தோற்கவில்லை “ என கூறினார். ஆனால் ஈழத்தீவில் சிங்கள பௌத்த ஏகாதியபத்திய அரசாங்கத்தால் மனித உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் நடைபெறுகின்றது.

2023க்கான மனித உரிமை தின கருப்பொருள் “சுதந்திரம், சமத்துவம், அனைவருக்குமான நீதி “ என்பதாகும். ஆனால் இது ஈழத்தீவில் கேள்விக்குறியே.