இனங்காணப்பட்ட முதியவர் ஒருவர் ஒழுங்கான முறையில் சிகிச்சை பெற மறுத்ததை அடுத்து குறித்த முதியவர் நீதிமன்றில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், குறித்த நோய் குணமடையும் வரை வைத்தியசாலை விடுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம் றியால் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.ஊர்காவற்துறை சின்னமடு பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காச நோயின் தாக்கத்துக்குள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டிருந்தார்.
அவர் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெறுவதற்கு வருவதை நிறுத்திக்கொண்டுள்ளார். அப்பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களால் சிகிச்சை பெறுமாறு பல தடவை அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. காச நோய் இனங்காணப்பட்ட நபர் ஒருவர் கட்டாயமாக 6 மாதங்கள் தொடர்சியாக சிகிச்சை பெற வேண்டும் என்ற வகையில் அவரை சிகிச்சை பெற செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அவர் அதை மறுத்து வந்த காரணத்தால் பொதச்சுகாதார பரிசோதகர்களான பா.சஞ்சீவன்,சோ.ரூபதாஸ் ஆகியேர் இணைந்து குறித்த நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த முதியவரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜராக்குமாறு நீதவான் நே முன்தினம் ஊற்காவற்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
நேற்றைய தினம் குறித்த வழக்கு மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. ஆனால் வேறொரு வழக்குக்காக நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்திருந்த குறித்த முதியவரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் படுத்தினர்.
குறித்த முதியவரை எச்சரிக்கை செய்த நீதவான் நோய் குணமடையும் வரை கோப்பாய் காச நோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் தங்கி நின்ற சிகிச்சை பெற வேண்டும் என உத்தரவிட்டதுடன், அங்கிருந்து தப்பிச்சென்றால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்குள்ளாவீர் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் குறித்த முதியவர் நீதிமன்றில் இருந்தே நோயாளர் காவு வண்டி மூலம் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

