தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை

43 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்  2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01)  நிலையியற் கட்டளை 27/ 2கீழ் கேள்வி கேட்கும் நேரத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை 2025ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில்  ஜனாதிபதிக்கு தீர்மானிக்க முடியாது. அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை.

அத்துடன் எல்லை நிர்ணய குழுக்களை நியமித்தல்,நிதியில்லை எனக் கூறுவது,தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்வது,தேர்தல் திணைக்கள அதிகாரிகளை ஜனாதிபதி அழைப்பது,தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மூலம் கட்டுப்பணங்கள் ஏற்றுக்கொள்வதை நிறுத்துவது, அமைச்சரவை தீர்மானங்களை எடுப்பது,தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வரைவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது,தேர்தலை நடத்தினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது போகும் எனக் கூறுவது, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை பதவி விலகக் கோருவது மற்றும் இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தல் போன்ற பல்வேறு உபாயங்களை கையாண்டு தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி முயன்றார்.

மேலும் தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்கள் சம்பளம் தொடர்பில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் ,இன்றளவிலும் அவர்களுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை. அவர்கள் கடமையாற்றும் நிறுவனங்களுக்குச் செல்லக் கூட அனுமதிக்கப்படுவதில்லை

தரம் குறைந்த உரங்களை இறக்குமதி செய்யவும், நட்புவட்டார நண்பர்களுக்கு கோடிக்கணக்கான வரிச்சலுகைகளை வழங்கவும் அரசாங்கத்திடம் பணம் இருந்தால், தேர்தலை நடத்த ஏன் பணம் இல்லை? .

உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்படாத நிலையில், அரசாங்க தரப்பில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை தயாரித்துள்ளனர். இதுபோன்ற சூழ்ச்சிகரமான உபாயங்களை கையாளுவதை தவிர்க்க வேண்டும்.  என்றார்.