பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே,ரோஹன பண்டார மற்றும் சுஜீத் பெரேரா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்த அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மறுத்து,பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சமர்ப்பித்த அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சிறப்புரிமை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.ஆகவே இந்த பிரச்சினை பற்றி பேசி இனி பயனில்லை.ஆகவே அறிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது பாராளுமன்ற வளாகத்தில் 2023.10.20 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே,ரோஹன பண்டார, சுஜீத் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ சபைக்கு சமர்ப்பித்தார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இந்த சம்பவம் தொடர்பில் பிரதி சபாநாயகர் தலைமையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அறிவியுங்கள்.அந்த பரிந்துரைகளை புறக்கணித்து அரசியல் ரீதியிலான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.ஆகவே தயவு செய்து பிரதி சபாநாயகர் சமர்ப்பித்த அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் என்றார்.
இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா,சம்பவம் தொடர்பில் மாத்திரமே அந்த குழு விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பித்தது.
விசாரணையை கொண்டு பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே அறிக்கை சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் பிரதி சபாநாயகர் சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகள் சிறப்புரிமை குழுவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.இது நியாயமற்றது.ஆகவே முழுமையான அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் என்றார்.
இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த சபாநாயகர் முறையான விசாரணைகளுக்கு அமையவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த விடயம் பற்றி இனி பேசுவது பயனற்றது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் சமர்ப்பித்த அறிக்கைக்கும்,சமல் ராஜபக்ஷ தலைமையிலான சிறப்புரிமை குழு முன்வைத்துள்ள அறிக்கையின் பரிந்துரைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றார்.
மீண்டும் கருத்து தெரிவித்த சபாநாயகர்,பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தான் சிறப்புரிமை குழு நியமிக்கப்பட்டது.அந்த குழுவுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது.ஆகவே பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய லக்ஷமன் கிரியெல்ல,பாராளுமன்ற சிறப்புரிமை குழு உள்ள நிலையில் ஏன் பிரத்தியேக குழுவை நியமித்தீர்கள்.இந்த குழு நீதியரசர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்ய பரிந்துரைத்துள்ளது.ஆகவே தற்போது சமர்ப்பித்துள்ள அறிக்கை முறையற்றது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீத் பெரேரா,இந்த சம்பவத்தில் என் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பிரதி சபாநாயகர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் முரண்பாடு தோற்றம் பெறுவதற்கு மூல காரணியாக இருந்த அந்த இராஜாங்க அமைச்சருக்கு மூன்று மாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ள தடை விதிக்கவும்,அந்த சம்பவத்தை ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததற்கு 2 வாரங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ள எனக்கு தடை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமல் ராஜபக்ஷ தலைமையிலான சிறப்புரிமை குழுவில் அந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்படவில்லை.
ஆகவே பிரதி சபாநாயகர் சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை பகிரங்கப்படுத்துங்கள் என்றார்.

