ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டுமாம்!

258 0

நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகின்றார்.

மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்று சிந்திக்க வேண்டும் என்பதுடன், நாட்டின் ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்காக அதிகாரத்தை பகிர்ந்தளித்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருக்கின்ற மக்களுக்கு தமது நடவடிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மற்றும் தமது மதங்களை வழிபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பது சம்பந்தமான திருத்தங்களை வடக்கு முதலமைச்சர் மாத்திரமல்லாது தென்னிலங்கை முதலமைச்சர்களும் முன்வைத்திருப்பதாகவும், அதனூடாக நாட்டை பிரித்தல் என்ற கருத்தை எவரும் கூற முடியாது என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இனங்களும், அனைத்து மக்களும் ஐக்கியப்பட்டு ஒரு இலங்கையை மற்றும் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்றும் அதற்காக மத நல்லிணக்கம் மாத்திரமன்றி வெவ்வேறு மக்களிடையே காணப்படுகின்ற மத நல்லிணக்கமும் முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.