மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு, நினைவேந்தல் வலயங்கள் ஒழுங்கமைப்பு – கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு

64 0

மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு, அந்தந்த இடங்களில் நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இக்குழுவினர் நேற்று (24) கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கூடியதையடுத்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கனகபுரம் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உப தலைவர் அருணாசலம் வேழமா லிகிதன் தெரிவிக்கையில்,

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் மாவீரர் தின நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை 27ஆம் திகதி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின்போது, மாவீரர் துயிலும் இல்ல வளாகத்துக்குள் மிகுந்த சன நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

சுடர்களை ஏற்றுவதில் மாவீரர்களின் குடும்பங்கள் பங்குகொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரழ் அதிகமாக உள்ளது. அதை ஒழுங்குபடுத்தும் முகமாக, 2009ஆம் ஆண்டுக்கு முன்னரை போல மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவிக்க வேண்டும்  என்ற எமது பணிக்குழுவின் தீர்மானத்துக்கமைய, இம்முறை துயிலும் இல்ல வளாக 2007ஆம் ஆண்டு வரையிலான மாவீரர்களின் பெயர்ப் பட்டியல் பெறப்பட்டு ‘அ’ தொடக்கம் ‘ஈ’ வரையான வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்கள் என்பவற்றின் பெயர் விபரங்கள் குறித்த வலயங்களில் பதியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆகவே, அந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 2 மணித்தியாலங்களுக்கு முன்பே வருகை தந்து, தங்களது பிள்ளைகளின் பெயர் எந்த வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறதோ, அந்த வலயத்துக்குள் சென்று சுடரேற்றுவதற்கு தயாராகுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நிலையில், 2007, 2008, 2009 ஆண்டுகள் வரையும் மாவீரர்களாக இருந்தவர்களது பெயர் விபரங்கள் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. அவ்விபரங்கள் தலைமைச் செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்போது அந்த பெயர் விபரங்களும் எதிர்வரும் காலங்களில் ஒழுங்குபடுத்தப்படும்.

இவ்வாண்டு அவ்வாறே பெயர் விபரங்களற்ற மாவீரர்களுக்காக “உ”வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வலயத்தில் பெயர் குறிப்பிடப்படாத மாவீரர்களுக்கான சுடர்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

அதைத் தவிர, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் தவிர்ந்த ஏனைய துயிலும் இல்லங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் விளக்கேற்றுவதற்காக ‘ஊ’ வலயம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த வலயங்களின் அடிப்படையில், உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையவர்கள் நேரங் காலத்தோடு வருகை தந்து, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைப்புக்கு அமைவாக அஞ்சலி செலுத்த முடியும்.

மேலும், 27ஆம் திகதி பிற்பகல் 3 மணியுடன் துயிலும் இல்லத்தின் பிரதான வீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, மாற்று வழியை பிரயோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்று வழியை பயன்படுத்த சாரதிகள் ஒத்துழைக்க வேண்டும்.

அதேவேளை, துயிலும் இல்ல வளாகத்துக்கு இரு பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்த தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் போன்று இவ்வருடமும் ஐஸ்க்றீம் வியாபாரம் உள்ளிட்ட சிறு வியாபாரங்கள், வர்த்தக நடவடிக்கைகள் துயிலும் இல்லத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

அன்றைய நாளை புனிதப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்தழைக்க வேண்டும்.

மதுபான விற்பனை நிலையங்களை பூட்டி மாவீரர் தின நினைவேந்தலுக்கு ஒத்துழைக்க நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவற்றையும் பூட்டி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், துயிலுமில்ல வளாகத்தின் புனிதத்துவத்தை பேணும் வகையில் அனைவரும் கலாசார உடைகளையே அணிய வேண்டும்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்போது செல்ஃபி எடுப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்த்து, நினைவேந்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அத்துடன், டிப்போ சந்தியிலிருந்து துயிலும் இல்லத்துக்கான குறுந்தூர சேவைகள், தனியார் பேருந்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த சேவையினையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளியிடங்களில் இருந்து வருகை தரும் மக்கள் டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் குறித்த பேருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.