ஏப்ரல் 3-ந்தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு

202 0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 3-ந்தேதி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக விவசாயிகளின் துயரத்தைப்போக்குவதற்கு மறுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் குற்றவாளி வழிகாட்டும் அ.தி.மு.க. பினாமி அரசு தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற ஏப்ரல் 3-ந்தேதியன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பொதுவேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

தேசிய, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குவதில் சிறு-குறு-பெரு விவசாயிகள் என வித்தியாசம் காட்டாமல் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்குவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், அண்டை மாநிலங்களிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிமைகளை நிலைநாட்டுவது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசுக்கு கண்டனம், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத்தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் என்னை வந்து சந்தித்து ஆதரவு கேட்டார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வருகிறது. ஆனாலும் மத்திய- மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஒரு பொருட்டாகவே நினைத்து பரிசீலிக்க மறுப்பதால், இன்றைக்கு டெல்லியில் தமிழக விவசாயிகள் பட்டினியும், பசியுமாக கிடந்து தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.

இந்தநிலையில் அல்லல்படும் விவசாயிகளின் துயர் அறவே நீங்குவதற்காக தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஏப்ரல் 3-ந்தேதி நடத்தப்படும் வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. தனது பரிபூரண ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களும், விவசாயிகளும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்ற வேளையில், மக்களின் அச்ச உணர்வு பற்றி துளியும் கவலைப்படாமல், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் தனியார் கம்பெனியுடன் மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டைரக்டர் ஜெனரல் ஆப் ஹைட்ரோ கார்பன் வெளியிட்டுள்ள பத்திரிக்கைக் குறிப்பில், இத்திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதுபற்றி மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மத்திய அரசிடம் ஆலோசித்து, மாநில அரசு அவர்களின் அச்சத்தைப் போக்கிய பிறகு இத்திட்டப் பணிகள் துவங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆக தமிழக பா.ஜ.க. தலைவர்களும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய நெடுவாசல் கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகள் ஈவு இரக்கமின்றி மீறி விட்டனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருந்து, மாநில அரசின் துணையை இப்போது கோரியிருக்கிறது என்பதே இந்தப் பத்திரிக்கைச் செய்தியை படிக்கும் போது தெரிய வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து இதுவரை இங்குள்ள அ.தி.மு.க. அரசு வெளியிடவில்லை. இத்திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது கூட, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் கடிதம் குறித்து விளக்கிட முன்வரவில்லை.

ஆகவே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இருக்கும் விவரங்களை ஒளிவுமறைவின்றி மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதேநேரத்தில், இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுக்காது என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை முதல்-அமைச்சர் காப்பாற்ற வேண்டும்.

இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்காமல், விவசாயிகளின் கவலையையும், எதிர்காலத்தில் அந்தப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடும் என்ற மக்களின் அச்சத்தையும் கவனத்தில் கொண்டு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.