ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: முரளிதரராவ்

229 0

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்”, என்று தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி தண்டையார்ப்பேட்டை டி.எச்.ரோட்டில் பா.ஜ.க. தேர்தல் பணிமனை திறக்கப்பட்டு உள்ளது. இப்பணிமனையை தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் நேற்று பார்வையிட்டார். பின்னர் தேர்தல் களப்பணிகள் மற்றும் பிரசார வியூகம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் மற்றும் மாநில நிர்வாகிகள், தேர்தல் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முரளிதரராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதுள்ள அரசியல் மிகவும் மோசமாக உள்ளது. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது. பணம் கொடுத்து ஓட்டு பெறும் பழைய நிலைமை மீண்டும் தலை தூக்கியுள்ளது. பணம் இருந்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையை பா.ஜ.க. மாற்ற நினைக்கிறது.

பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. சார்பில் புகார்கள் தரப்பட்டு இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்றும், தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க. என்றும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையான மாற்று அது இல்லை. 2 திராவிட கட்சிகளிலும் ஊழல் தான் மேலோங்கி இருக்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு புதிய அரசியல், ஒரு மாற்று அரசியல் தேவைப்படுகிறது.

அந்த மாற்று அரசியலை பா.ஜ.க. தான் கொடுக்க முடியும். தமிழக கலாசாரம் பாதிக்காமலும், தனித்தன்மை கெடாமலும் ஒரு நல்ல அரசியலை பா.ஜ.க. தான் உருவாக்க முடியும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு என்பது, தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும். இடைத்தேர்தலில் பா.ஜ.க. வுக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.