2016 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதமானது 2015ஆம் ஆண்டை விட அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதமானது அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை கொழும்பு – 05, விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி சமக்கா பெஸ்குவல் பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி, எஸ்.எம்.முனசிங்க பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை கொழும்பு – 10 ஆனந்த மகா வித்தியாலயத்தின் மாணவர் ஆர்.எம்.சுகத் ரவிந்து சன்டர் என்ற மாணவரும், மாத்தறை ராகுல வித்தியாலத்தின் திமுத் ஓசடி மிரிஸ்கமகே என்ற மாணவரும் பெற்றுள்ளனர்.
இதனிடையே, அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாண இந்து கல்லூரியின் மாணவர் ஏ.அபிநந்தன், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில், தமிழ் மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 11 மாணவிகள் 8 ஏ மற்றும் பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அத்துடன், ஆங்கில மொழி மூலம் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 5 மாணவிகள் 8 ஏ மற்றும் பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி புனித தெரேசா பெண்கள் கல்லூரியில் இரண்டு பேர் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ள நிலையில், 54 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இதனிடையே, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி பரசுராம் மதுரா 9 ஏ சித்திகளை பெற்றுள்ளார்.
இதேவேளை இந்த பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

