பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில், சித்திரவதைக்குள்ளாகி மரணித்த பெண்ணின் உடல்..(காணொளி)

336 0

 

மலையகத்திலிருந்து மத்தியகிழக்கு நாடொன்றிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில், சித்திரவதைக்குள்ளாகி மரணித்த பெண்ணின் உடல் 5 மாதங்களின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற ஹட்டன் சூரியகந்த தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்த நிலையில், அவரின் உடல் 5 மாதங்களுக்கு பின்னர் உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணாகச் சென்ற மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த தோட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பழனியாண்டி கற்பகவள்ளி என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்த பெண் மஸ்கெலியாவிலிருந்து தனது குடும்ப வறுமையை போக்கிக் கொள்ளவென கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக சவூதி அரேபியா நாட்டின் றியாத் பிரதேசத்தில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற இவர் சவூதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குறித்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றோடு தொடர்புகளை ஏற்படுத்தி உடனடியாக உயிரிழந்த உடலத்தை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டுள்ளனர்.

எனினும் 5 மாதங்களின் பின்னர் இன்று கொழும்பில் வைத்து குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.