அச்சுவேலி முக்கொலை வழக்கில் கணவனுக்கு எதிராக மனைவி சாட்சியம்

348 0
என்னை கழுத்தில் பிடித்து மேலே தூக்கி சரமாரியாக வெட்டினார்.அச்சுவேலி முக்கொலை வழக்கில் கணவனுக்கு எதிராக மனைவி சாட்சியம்.
அச்சுவேலி முக்கொலை  வழக்கின் தொடர் விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் நேற்றைய தினம்   யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வழக்கின் சாட்சிய பதிவின் போதே எதிரியின் மனைவி மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில்  வசித்து வந்த பொன்னம்பலம் தனஞ்சயன் என்பவர் கடந்த 2014 அம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி தனது மாமியாரான நற்குணானந்தன் அருள்நாயகி, மைத்துணி யசோதரன் மதுசா, மைத்துணன் நற்குணானந்தன் சுபாஸ்கரன், ஆகியோரை கொலை செய்ததாகவும் மனைவி தனஞ்சயன் தர்மிகா மற்றும் மைத்துணியின் கணவர் தங்கவேல் யசோதரன் ஆகியோரை கொலை செய்த எத்தனித்தார் என்ற 5 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணை இடம்பெற்றது.
அதன் அடிப்படையில் 3 கொலைகள்,  2 கொலை முயற்சிகளை  மேற்கொண்டதாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ் மேல் நீதிமன்றில்  குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கை விரைவில் நடாத்துமாறு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இவ் வழக்கின் தொடர் விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் நேற்றைய தினம்   யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
வழக்கு தொடுநர் தரப்பில் அரச சட்டத்தரணி நிஷாந் நாகரட்ணம் ஆஜராகியிருந்ததுடன் எதிரி தரப்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன் மற்றும் கே.ரஞ்ஜித்குமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். மேற்குறித்த வழக்கில் உள்ள 14 சாட்சிகளில் முறையே 4ஆம், 5 ஆம், 2 ஆம் 3 ஆம், 6 ஆம்   சாட்சிகளின் சாட்சியப்பதிவு விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்றது.
வழக்கு தொடுநர் தரப்பின் 4 ஆவது சாட்சியும் எதிரியின் மனைவியுமான தனஞ்சயன் தர்மிகா (வயது 27) சாட்சியமிளக்கையில்
கதிரிப்பாய் அச்சுவேலிப்பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 4 ஆம் திகதி இரவு நானும் எனது அம்மா மற்றும் எனது தம்பி ஆகியோhர் எமது வீட்டின் சாமி அறையில் படுத்துறங்கினோம். புதிதாக திருமணமான எனது அக்கா, அவருடைய கணவர் மற்றும் எனது மகனான விஷ்னுஜன் ஆகியேர் மற்றறை அறையில் படுத்துறங்கினார்கள். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் என்னை ஒருவர் வெட்டுவது போல் உணர்ந்தேன் தன்ஞ்சயன் வெட்டிப்போட்டான் என அம்மாவின் குரல் கேட்டது திடீரென எழுந்த போது அம்மாவும் தம்பியும் எழுந்து நிற்பதனை அவதானித்தேன் அம்மா தனது கழுத்தை பிடித்தவாறு நின்றிருந்தார்.   அப்போது அறை வாசலில் ஒரு உருவம் நிற்பதை கண்டேன்.அது தனஞ்சயன் என்பதை உணர்ந்தேன்.
நான் உடனனே வெளியில் ஓடிச்சென்று ‘அக்கா அத்தான் கதைவை திறக்காதேங்கோ தனஞ்சயன் வெட்டீட்டான்’ என்று கத்தினேன். யாராவது காப்பாற்றுங்கள் என கத்தியவாறு வெளியில் சென்றேன். அப்போது எனது கழுத்தை தனஞ்சயன் பிடித்து இறுக்கினார். என்னால் கத்த முடியவில்லை. அன்று நிலவு வெளிச்சம் மிக தெளிவாக இருந்தது அதில் தனஞ்சயனை நான் நன்றாக அடையாளம் கண்டேன்.
‘4 மணித்தியாலமாய் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்ன கும்மாளம் போடுறீங்களோ குடும்பத்தோட செத்துப்போங்கோ’ என கூறி என்னை வெட்டுவதற்கு வந்தார். நான் இரு கைகளாலும் அந்த வாளை  பிடித்து தடுத்தேன் ஒரு நிமிடம் தான் என்னால் போராட முடிந்தது அதன் பின் என்னால் முடியவில்லை கைகள் இரண்டிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரது கையால் எனது கழுத்தில் பிடித்து என்னை  மேலே தூக்கி வலது கை இடது கை, முழங்கை, என பல இடத்திலும் தாறுமாறாக வெட்டினார். இறுதியாக முதுகில் ஓங்கி வெட்டிய பின் என்னை தூக்கி வீசிவிட்டு அம்மா இருந்த அறைக்குள் சென்றார்.
என்னால் ஓரளுவுக்கு எழும்பக்கூடியதாக அப்போது இருந்தது எழும்பி வீட்டு வேலியின் ஓடையால் குனிந்து வீதிக்கு வந்து வெளியில் பயத்தின் காரணமாக கொஞ்ச தூரம் சென்று விட்டேன். பின்னர் அக்காக்கு என்ன நடந்தது என அறிவதற்கு வீட்டுக்குமுன் வந்து மதிலால் எட்டிப்பார்த்தேன் அப்போது வெளியில் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. தனஞ்சயனின்  கையில் ஒன்றரை அடி நீளத்தில் வாள் போன்ற ஆயுதத்துடன் வீட்டு விறாந்தையில் நின்றதனை அவதானித்தேன்.
அப்போது அயல் வீட்டில் இருந்தவர் எனது சத்தத்தை கேட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது   அத்தான் வீட்டில் இருந்த முகம் முழுவதும் இரத்தத்துடன் வந்தார். அவருக்கு தலையில் பாரிய வெட்டு காயம் இருந்தது அக்கா எங்கே என கேட்டேன் மதுவுக்கு என்ன நடந்தது என தனக்கு தெரியாது என கூறினார். ஆட்டோவில் இருவரும் ஏறி அச்சுவேலி வைத்திய சாலைக்கு சென்றோம்.
நானும் தனஞ்சயனும்  9 மாதங்களாக இல்லறவாழ்வில் இருந்து பிரிந்து வாழ்கிறோம். எனக்கு நெஞ்சில் வருத்தம் இருப்பதாகவும் நான் இரண்டு வருடங்களில் இறந்துவிடுவேன் என தனஞ்சயன் கூறினார். அதன் பின்னர் பிள்ளையை பராமரிப்பதற்காக  எனது அக்காவை மறுமணம் செய்து தரும்படி கேட்டார். அவரே என்னை  எனது அம்மா வீட்டில் கொண்டுவந்து விட்டார். அடிக்கடி எமது வீட்டுக்கு வந்து தகராறு செய்வார்.பிள்ளையை காட்டும் படி பல முறைகளில் கோரிக்கை விடுத்தார் ஆனால் அது உண்மையான பாசமாக தெரியவில்லை.நான் பிள்ளையை அவருக்கு காட்டவில்லை.
தனஞ்சயனுக்கு பயந்து எனது அக்காவுக்கு நாம் இரகசியமான முறையில பதிவுத்திருமணம் செய்து வைத்தோம். சம்பவ தினத்துக்கு முதல் நாள் தான் அக்காவும் அத்தானும் கிளிநொச்சியில் இருந்து எமது வீட்டுக்கு வந்திருந்தார்கள். தனக்கு அக்காவை மறுமணம் செய்து தரவில்லை என்ற காரணத்தால் தான் எமது குடும்பத்தையே அழித்தார் என கண்ணீர் மல்க மன்றில் எதிரிரியின்மனைவி சாட்சியம் அளித்தார்.
5 ஆம் சாட்சியான தங்கவேல் யசோதரன் சாட்சியமளிக்கையில்
2014.05.04 ஆம் திகதி நள்ளிரவு 12.45 மணியளவில் நாம் படுத்துறங்கிய அறைக்கு பக்கத்து அறையில் இருந்து காப்பாற்றுங்கள் என கூக்குரல் கேட்டது. தனஞ்சயன் வெட்டுறான் என கத்தினார்கள். வெளியே செல்ல வேண்டாம் என எனது மனைவி மதுசா கூறினார். நான் உடனடியாக கதவை திறந்து கதவுக்கு போட்டிருந்த தாள்ப்பாளை எடுத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி சென்றேன். அப்போது தனங்சயன் என்னை நோக்கி வாளால் வெட்டுவதற்கு வந்தார் நான் தடுக்க முற்ட்ட போது எனது கையில் வெட்டு விழுந்தது நான் நிலைதடுமாறி விட்டேன் அதன் பின்னர் எந்த இடங்கிளில் வெட்டு விழுந்தது என நினைவில்லை வெளியில் வந்து எனமு மனைவியின் தங்கை என்னை பிடித்து ஆட்டோவில் ஏற்றுவது நினைவிருந்தது. எனது இருண்டு கைகள் நெஞ்சு முதுகு பகுதிகளில் வெட்டுக்காயம் இருப்து பின்னர் தான் அறிந்தேன். எனது மனைவிக்கு என்ன நடந்தது என்று தெரியாது சில நாட்களின் பின்னர் தான் அவர் இறந்து விட்டார் என உணர்ந்தேன்.என சாட்சியமளித்தார்.
2 ஆம் சாட்சியான கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் சாட்சியமளிக்கையில்
குறித்த சம்பவம் இடம்பெற்று பல மணி நேரங்களின்பின்னர்தான் எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொது எனது சகோதரி அருள்நாயகி மருமகள் மதுசா ஆகியோர் இறந்து கிடந்தார்கள். தர்மிகாவின் குழந்தை மருமகள்மதுசாவின் சடலத்தின் அருகே பயந்தபடி இருந்ததை அவதானித்தேன். சடலங்கைளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். அங்கு சென்ற போது மருமகன் சுபாஸ்கரனனும் இறந்த நிலையில் இருந்ததை கண்டேன் என சாட்சியமளித்தார்.
அதே போன்று 3 ஆம் சாட்சியான பொன்னுத்துரை கௌரிகாந்தன் சாட்சியமளிக்கையில் அன்றைய தினம் இரவு காப்பாத்துங்கோ என கூக்குரல் கேட்டது உடனடியாக ஆட்டோவை எடுத்துக்கொண்டு அந்த வீட்டின் அருகே வந்தேன் தர்மிகாவும் அவரது மைத்துணனும் காயத்துடன் வருவதை கண்டேன் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றேன் என சாட்சியமளித்தார். அத்துடன் 6 ஆம் சாட்சியான கணபதிப்பிள்ளை செல்வநாயகம் என்பவரும் சாட்சியமளித்தார்.
மேற்குறித்த வழக்கின் சிவில் சாட்சியங்களின் சாட்சியப்பதிவு நிறைவுற்ற நிலையில் இவ் வழக்குடன் தொடர்புடைய சான்றுப்பொருள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இருப்பதாகவும் பகுப்பாய்வு அறிக்கையையும் சான்றுப்பொருளையும் நாளை பதன் கிழமை மன்றில் சமர்ப்பித்து சான்றுப்பொருளை அடையாளம் காட்டுவதற்கு மீண்டும் சாட்சிகளை அழைக்க அரச சட்டவாதி மன்றில் அனுமதி கோரியிருந்தார் அதற்கு நீதிபதி  அனுமதி வழங்கியதுடன் தொடர்விசாரணை இன்றைய தினத்துக்கு  ஒத்திவைக்கப்பட்டது.அத்துடன் எதிரியை விளக்கமறியில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.