பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கவேண்டும் -டெனிஸ்வரன்

224 0
சுமார் 200 வருடங்களுக்குமேற்பட்ட வரலாற்றைக்கொண்ட மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் கடந்த பல வருடங்களாக கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் இருந்துவருகின்றது.
மேற்படி தமது காணிகளை விடுவிக்கும்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் பயனற்றுப்போயிருந்தமையால் கடந்த வியாழன் 23ஆம் திகதி மக்கள் தமது மண்ணை மீட்டெடுப்பதற்காக அறவழி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று நான்காவது நாளாகவும் போராட்டம் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், கிராமமக்கள் ஆகியோரது பூரண ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டுவருகிறது, இந்நிலையில் முள்ளிக்குளம் மக்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும்வகையில் வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பல நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட பூர்வீக கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் அருகாமையிலுள்ள மலங்காடு பகுதியில் தற்காலிகமாக குடியேறி பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருவது யாவரும் அறிந்ததே, இக்காணிகளை விடுவிக்கும்பொருட்டு தானும் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை முன்னாள் ஆயர் அதி வந்தனைக்குரிய இராயப்பு ஜோசெப் ஆண்டகை அவர்களும், கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், அக்காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்ச அவர்களுடன் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடியவேளையில் அவர் காணிகள் விடுவித்தல் தொடர்பில் எதிர்காலத்தல் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் தொடர் நடவடிக்கையாக அமைச்சர் டெனிஸ்வரளால் வடக்கு மாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேற்படி பூர்வீக கிராமத்தைவிட்டு நீண்ட தூரத்தில் குடியேறி வசித்துவருகின்றமக்கள் பலமயில் தூரம் நாள்தோறும் கால்நடையாக சென்றே தமது மீன்பிடி தொழிலை மேற்கொண்டுவருவதாகவும், முள்ளிக்குளம் கிராமம் விடுவிக்கப்படும்பட்சத்தில் மக்கள் தமது சொந்த நிலத்தல் குடியேறி சந்தோஷமாக வாழ்வதோடு, பல்வேறு அசெளகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
அத்தோடு நிலமீட்ப்புப்போராட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் இம்மக்கள் போராட்டம் முழுமையாக வெற்றிபெறவேண்டுமானால் அனைத்துமக்களும் ஒற்றுமையாக செயற்படுவதோடு, இந்த நல்லாட்சி அரசுக்கு பொருத்தமான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பென்பது முக்கியமானவிடயம் என்றபோதிலும் அதனை நிர்வகித்துக்கட்டுப்படுத்துவதற்கு ஏலவே பாரிய முகாம்கள் காணப்படுவதால் சிறு சிறு முகாம்களிலும் மக்களது பூர்வீக கிராமங்களிலும் இருக்கிற இராணுவம், கடற்படை, வான்படை ஆகியபடைகள் மக்களது கஷ்ட துன்பங்களை கருத்திற்கொண்டு மேற்படி இடங்களைவிட்டு வெளியேறி பெரிய முகாம்களுக்கு செல்வதே காலத்தின் தேவையாகவுள்ளதுமட்டுமல்லாது, இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களது மனங்களையும் வென்றெடுக்கமுடியுமெனவும் அவர் அங்கு தெரிவித்திருந்தார்.
அபிவிருத்தி என்பது இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் அதனைப் படிப்படியாக அடைந்துகொள்ளமுடியும் என்றும், இப்பொழுது எமது மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் முக்கியமானதாகக்காணப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணிகள் விடுவிப்பு ஆகியவை தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு பொருத்தமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.