சம்பந்தனை பதவி விலகுமாறு கோருவதும் தமிழரசின் தலைமையை இலக்கு வைப்பதும்!

144 0

தமிழரசுக் கட்சித் தலைவர் போட்டியில் சிவஞானம் சிறீதரனை தோற்கடிக்க வேண்டுமென்றால் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தவிர்ந்த மற்றைய நான்கு மாவட்டங்களிலும் தாமே அதிக வாக்கெடுக்க வேண்டுமென்பது சுமந்திரனுக்குத் தெரியும். சாணக்கியன், கலையரசன், சத்தியலிங்கம் ஆகியோருடன் குகதாசனின் ஆதரவை பெறவேண்டுமென்றால் அவரை திருமலையில் எம்.பி.யாக்க வேண்டும். அதற்காக சம்பந்தனைப் பலிக்கடாவாக்குவது அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட சுமந்திரனின் மூல இலக்கு.
தமிழரின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு வருகிறதோ இல்லையோ, வாராவாரம் ஏதோ ஒரு புதிய பிரச்சனை வந்துவிடும்.

கடந்த சில வாரங்களாக நீதிபதி சரவணராஜா விவகாரம் சூடு பிடித்திருந்தது. ”காணாமல்போன” ஒருவராகியுள்ள சரவணராஜா எந்த நாட்டில் என்று எவருக்கும் தெரிந்ததாக இல்லை. இனி இவர் விடயம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடக்கூடும்.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆயத்தமான குழு, அதற்கான கடிதத்தில் ஒப்பமிடும் விடயத்தில் இழுபறியில் நிற்கிறது. இனியென்ன நடைபெறும்? தமிழரசின் சம்பந்தனையே அழைக்காத மோடி புதிய கோஷ்டியை அழைப்பாரா?

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரத்தில் “எல்லாம் நானே” என்ற பாணியில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் மங்களராமய அம்பிட்டிய சுமணதேரர். தமிழரைத் துண்டுதுண்டாக வெட்டிவிட்டு தமது தாயின் கல்லறைமேல் தாமும் உயிரைத் துறப்பேன் என்று சாவலும் விடுகிறார் இவர்.

1956ல் வெலிமட எம்.பி.யாகவிருந்த கே.எம்.பி.ராஜரட்ண தமிழரின் தோலில் செருப்புச் செய்து காலில் அணிவேன் என்று நாடாளுமன்றத்தில் அறைகூவிய பாதையில் ஒரு படி மேலே சுமணதேரர். அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ராஜரட்ண எம்.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. சுமணதேரர் மீதும் ரணில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்காது. இதுதான் எழுபத்தைந்து ஆண்டுகளாக நடைபெறும் சிறீலங்காவின் சிங்கள பௌத்த மேலாதிக்க ஜனநாயகம்.

கடந்த சில நாட்களாக தமிழர் அரசியலில் முக்கிய பேசுபொருளாக மட்டுமன்றிஇ பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியிருப்பது சுமந்திரன் எம்.பி. தமிழரசின் மூத்த தலைவரும் பழுத்த அரசியல்வாதியுமான இரா.சம்பந்தன் மீது வீசியிருக்கும் பாணம்.

சம்பந்தனுக்கு இது போதாது, இன்னமும் வேண்டுமென்று கூறுகின்றனர் சிலர். வேலியில் நின்ற ஓணானைத் தூக்கி பொக்கற்றுக்குள் போட்டால் அது கடிக்கத்தானே செய்யும் என்கின்றனர் வேறு சிலர். இறக்குமதிகள் இப்படித்தான் கோலம் காட்டும் என்கின்றனர் அனுபவப்பட்ட கட்சியின் மூத்தவர்கள் சிலர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர், 2010ம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக சுமந்திரனை கொழும்பிலிருந்து இறக்கி உள்ளே கொண்டு வந்தவர் சம்பந்தன்தான். சம்பந்தனின் இரு கரங்களாகவும் ஆலோசகராகவும் உரையாளராகவும் – எல்லாமாகவே தம்மைப் படம் காட்டியவர் சுமந்திரன். கூடாரத்துக்குள் ஒட்டகம் ஒன்று நுழைக்கப்படுகிறது என்று சில ஊடகர்கள் அவ்வேளை எழுதியது ஞாபகம் இருக்கிறது.

சம்பந்தன் சொல்லாதவைகளையே அவர் தம்மிடம் சொன்னதாகக் கூறி பல காரியங்களை தம் சொந்த விருப்பப்படி மேற்கொண்டுஇ அதற்காகவே கட்சியின் பேச்சாளராகி தமிழரை மட்டுமன்றி கூட்டமைப்பையும் பிளவுபடுத்திய சாதனையாளர் சுமந்திரன்.

2015 தேர்தலில் பெருமளவு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றாராயினும் 2020 தேர்தலில் அதில் அரைவாசி குறைந்து போனது. இத்தேர்தலில் வெற்றி கிடைக்காது என்ற அச்சத்தால் கிளிநொச்சி சிவஞானம் சிறீதரனுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தவர் இவர்.

இத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இரவோடிரவாக ராணுவ வானூர்தியில் கொழும்பு சென்று, அப்போது செல்வாக்கிலிருந்த பசில் ராஜபக்சவை சந்தித்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பியதில் இவரது வெற்றிக்குச் சம்பந்தம் உண்டு என்று வெளியான தகவல்களை மறந்துவிட முடியாது.

கனடா உட்பட சில மேற்கு நாடுகளுக்கு இவர் விஜயம் செய்தபோது எவ்வாறு கூட்ட மேடைகளிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தனி வரலாறு. இவ்வாறு சுமந்திரனின் பதின்மூன்று வருட தமிழரசு மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த அரசியல் வாழ்வு பற்றி சிலாகிக்க விடயங்கள் பலவுண்டு.

தமிழ்த் தேசிய அரசியலில் நுழைக்கப்பட்டதற்கான வேலைகளில் பலவற்றை நிறைவேற்றிய பின்னர், இப்போதுதான் அதன் கருவறைக்குள் புகுந்து “ஐயா” வை பதம் பார்க்கும் வேலையை ஆரம்பித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் சம்பந்தனின் தோளில் ஏறி நின்று காதுகளைத் திருகி தலையைச் சரிக்கும் பாணியில் தனது கைங்கரியத்தை அற்புதமாக அரங்கேற்றியுள்ளார் இவர்.

“சம்பந்தன் முதுமையினால் அரசியல் செயற்பாட்டில் பங்களிப்பு செய்ய முடியாதுள்ளார். 288 நாடாளுமன்ற அமர்வுகளில் 39க்கு மட்டுமே வருகை தந்துள்ளார். அவருக்கு கிடைத்த சம்பளம் 4 மில்லியன் ரூபா. இதனைவிட போக்குவரத்து, எரிபொருள், தொலைபேசி என்று நான்கேகால் லட்சம் ரூபாவுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. என்று குற்றப்பத்திரிகையை ஊடகம் ஒன்றின் வாயிலாக வாசித்துள்ள சுமந்திரன், சம்பந்தனின் எம்.பி.பதவியை இன்னொருவருக்கு வழங்க வேண்டுமென்று ஆலோசனை வழங்கியுள்ளார். அல்லது கோரியுள்ளார்.

சுமந்திரன் குறிப்பிட்ட சில விடயங்கள் உண்மையாக இருக்கலாம். இது தவிர சம்பந்தனின் முதுமை கருதியும் அரசியல் மூப்புக் கருதியும் அவருக்கு கொழும்பில் இலவசமாக தனி வீடும் பணியாட்களும் அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தார்மீக நியாயம் உண்டு.

ஆனால் சுமந்திரன் கட்சிக்குள் பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை கட்சியின் பேச்சாளர் என்பதாலோ என்னவோ பொதுவெளியில் பேசித் தள்ளியுள்ளார். முக்கியமாக, சிங்கள ஊடகம் ஒன்றின் செவ்வியில் இதனைத் தெரிவித்ததன் வழியாக சிங்கள மக்களை, இனவாத அரசியல்வாதிகளை சம்பந்தனுக்கு எதிராக திருப்பி விடும் நோக்கம் சுமந்திரனுக்கு இருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

திருமலையின் பிரதிநிதியாக பிறிதொருவரை தமிழரசுக் கட்சி நியமித்தால் அவர் கரிசனையாக செயற்படுவாரென்று தெரிவித்துள்ள சுமந்திரன், இது தொடர்பாக எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று முன்னறிவித்தலும் கொடுத்துள்ளார். அதாவது, பதவி விலக மறுத்தால் அவர் பதவி நீக்கப்படுவாரென்பது இக்கூற்றின் உள்ளர்த்தமாகத் தெரிகிறது. இப்படித்தான் பல கேள்விகளும் எழுகின்றன.

2018ல் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சண்முகம் குகதாசனை எவ்வாறாவது திருமலை எம்.பி.யாக்க வேண்டுமென்பது சுமந்திரனின் உட்கிடக்கை. குகதாசன் என்பவர் கனடாவில் தமிழர்களால் நடத்தப்பட்ட கல்வி நிலையம் ஒன்றின் தமிழாசிரியராக இருந்தவர். கனடிய அரசில் பணியாற்றியவர் அல்ல. கனடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கிளைகளின் முக்கியஸ்தராக இருந்தபோது அதன் தேர்தல் பணிகளுக்காக பெருமளவு நிதி சேகரித்துக் கொடுத்ததாக இவரே பகிரங்கப்படுத்தியுள்ளார். மற்றப்படி கனடிய தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக இவர் இருந்தவரல்ல.

குகதாசன் திருமலையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதாலும்இ கட்சிக்கு நிதி சேகரித்து வழங்கியவர் என்பதாலும் சம்பந்தன் இவரில் நம்பிக்கை வைத்து அழைத்து தமது தொகுதிப் பணிகளில் சிலவற்றை ஒப்படைத்தார். ஆனால், குகதாசன் திருமலை மக்கள் மத்தியில் தம்மை செல்லாக்காசாக்க எடுத்த முயற்சிகள் தெரிய வந்ததால், அவரை சம்பந்தன் ஓரங்கட்ட நேர்ந்தது என்கிறார்கள் திருமலையின் கட்சிப் பிரமுகர்கள்.

மறுபுறத்தில், விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் தமிழரசுக் கட்சி தலைவருக்கான போட்டியில் சிவஞானம் சிறீதரனும் சுமந்திரனும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் சிறீதரன் பெருமளவு செல்வாக்கு உள்ளவராக உள்ளார். இதனால் மற்றைய நான்கு தமிழ் மாவட்டங்களிலும் தமக்கான ஆதரவை பெருமளவுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை சுமந்திரனுக்கு உண்டு.

இதனால்இ மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி தேர்தல் மாவட்டங்களில் முறையே சாணக்கியன் எம்.பி, கலையரசன் எம்.பி, வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் சுமந்திரன் அணியினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கலையரசன் தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமனமாகும் விடயத்தில் சுமந்திரனின் வகிபாகம் எவ்வாறு இருந்தது என்பது பகிரங்க ரகசியம்.

திருமலையில் சம்பந்தனை இறக்கிவிட்டு அந்த இடத்துக்கு குகதாசனை எம்.பி.யாக்கினால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை இலகுவாக வென்று விடலாமென்ற கணக்கில் சுமந்திரன் காய்களை நகர்த்துகிறார். இதன் முக்கிய செயற்பாடே சம்பந்தனை முதுமையைக் காட்டி பதவி இறக்க வைக்கும் முயற்சி.

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழரசு அரசியலில் ஊறிப்போன சம்பந்தனுக்கு ஓர் ஆசையுண்டு. அது கட்சியின் உத்தியோகப்பற்றற்ற ஆயுட்காலத் தலைவராக இருப்பது. பேசமுடியாத நிலையிலும் தி.மு.க. தலைவராக மு.கருணாநிதி, அகில இலங்கை சோனகர் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவராக 90 வயதிலும் இருந்த சேர்.றசீக் பரீத் போன்றவர்களுக்கிருந்த ஆசை இவருக்கும் உண்டு. 21 பீரங்கிக் குண்டுகளின் மரியாதையை பெற வேண்டுமென்ற ஆசை.

ஆனால், சூழ்ச்சி இல்லாமல் அரசியலில் பதவி இல்லையென்பதை சம்பந்தன் ஏனோ மறந்துவிட்டார்.

தமிழரசுக் கட்சித் தலைவர் போட்டியில் சிவஞானம் சிறீதரனை தோற்கடிக்க வேண்டுமென்றால் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தவிர்ந்த மற்றைய நான்கு மாவட்டங்களிலும் தாமே அதிக வாக்கெடுக்க வேண்டுமென்பது சுமந்திரனுக்குத் தெரியும். சாணக்கியன், கலையரசன், சத்தியலிங்கம் ஆகியோருடன் குகதாசனின் ஆதரவை பெறவேண்டுமென்றால் அவரை திருமலையில் எம்.பி.யாக்க வேண்டும். அதற்காக சம்பந்தனைப் பலிக்கடாவாக்குவது அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட சுமந்திரனின் மூலஇலக்கு.

சுமாவின் குடுமி சும்மா ஆடாது!

பனங்காட்டான்