மக்களின் விருபத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதே எமது அரசியல் பயணம்

270 0
மக்களின் விருபத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதே எமது அரசியல் பயணம் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார்.
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதனையே தனது அரசியல் பயணமாக கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளாருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற அமைப்பின் செயற்பாட்டாளர்களுடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
சமத்துவம் சமூக நீதிக்கான அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலான் இன்றைய கலந்துரையாடலில் அதிகளவான பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. எமது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்  என்ற செய்தி இதன் மூலம் வெளிப்பட்டு நிற்பதை நான் உணர்கிறேன்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்த அனைவரினதும் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படும். இதேவேளை எங்கள் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களை மறுதலித்ததும் கிடையாது.  தவறுகள் விடாதவர்கள் மனிதர்களே அல்ல அதில் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல  ஆனால் தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்காலம் நோக்கி பயணிப்பதுதான் முக்கியமானது அதனை செய்திருக்கின்றோம்.
எங்களுடைய அமைப்பானது சமூக,சாதி சமய வேறுபாடுகளை கடந்து  செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதுதான் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் நோக்கம். கடந்த காலத்திலும் கூட நாம் எங்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களோ, எங்கு பாரபட்சங்கள் நடந்துள்ளதோ அங்கேயே அதிகம் பணியாற்றியிருக்கின்றோம். ஆகவே எதிர்காலத்திலும்  நாங்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறப்போறது கிடையாது.
மேலும் மக்களின் விருப்புதான்  என்னை புதிய நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றது. இப்பொழுதும் அந்த மக்களின் விருப்பத்திற்கு அமைவாகவே இந்த சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது.மக்கள் ஏனைய அரசியல் சக்திகள் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள் இதனால் அவர்கள் தாங்களாகவே தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து போராட தொடங்கியிருக்கின்றார்கள். இந்த மக்கள் போராட்டங்களுக்கு எமது முழுமையான ஆதரவை வழங்கி ஒன்றிணைந்திருக்கின்றோம்.  எனவே எங்களை பொறுத்தவரை எப்பொழுதும் மக்களின் அபிலாசைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வோம்.
நான் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக எனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை அவ்வாறு ஒரு நோக்கம் இருக்குமாயின் என்னை நோக்கி வரும் அழைப்புக்களை ஏற்று அதன்படி சென்றிருப்பேன். ஆனால் அதனை நான் விரும்பவில்லை மாறாக மக்களின் விருப்பத்தையே ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் தோற்றாலும் எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.நான் பதினேழு வயதிலேயே ஆயுதப் போராட்டத்தில் இணைந்துக்கொண்டவன். எனவே வென்றாலும் தோற்றாலும் மக்களின் பிரதிநிதியாகவே இருப்பேன். சொல்லைவிட செயல்தான் சிறந்தது என்றடிப்படையில் மக்களுக்கான பணியை தொடர்ந்தும் செய்வேன்.
தேசிய விடுதலை என்பது தனியே சிங்கள தரப்பினரிடம் இருந்து தமிழ் தரப்பு பெற்றுக்கொள்ளும் இன விடுதலை மட்டுமல்ல இனத்திற்குள்ளும் இருக்கின்ற அனைத்து வகையான ஒடுக்கு முறைகளுக்கும் இருந்தும் அதாவது சமூக விடுதலையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.