மயிலத்தமடு மாதவனையில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படுவரும் தமிழ் பண்ணையாளர்களின் கால்நடைகள் .

261 0

இலங்கையில் கிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பிரதேசம் இலங்கை பொருளாதாரத்துக்கு பெருமளவு வருவாயை இந்த பால் பண்ணையாளர்கள் ஒவ்வொரு வருடமும் ஈட்டிக்கொடுக்கிறார்கள் . இதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியாகவுள்ள மயிலத்தமடு மாதவனை பகுதி தமிழ் பாற் பண்ணையாளர்களிடம் 175,855 எருமைகள் மற்றும் 324,145 பசுக்கள் உட்பட தோராயமாக 500,000 கால்நடைகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை, அரச ஆதரவோடு சிங்கள குடியேற்ற வாசிகளால் 6948 கால்நடைகள் கொல்லப்பட்டும் , காயமடைந்தும் , காணாமல் ஆக்கப்பட்டும் , அல்லது வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்டும் ,உள்ளன. ஒருநாளைக்கு அண்ணளவாக 5000 லீட்டர் பாலினை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் அண்ணளவாக 3000 பேர் இந்த பாற்பண்ணை தொழிலால் இப்பகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதரத்தை கொண்டு நடாத்துகிறார்கள்.

இவர்களின் கால்நடை வளர்ப்பு தொழில் என்பது பாரம்பரியமாக அந்த பகுதியில் அவர்கள் செய்து வரும் தொழில், அவர்களின் மூதாதையர்கள் செய்த அதே தொழிலை அவர்கள் தொடர்ந்தும் தங்களின் வாழ்வாதாரத்துக்காக செய்து வருவதோடு தங்களின் வருவாய் மூலம் சொந்த பிரதேசத்துக்கும் மொத்த நாட்டுக்கும் வளம் சேர்கின்றார்கள்.

இன்று அந்த மக்களின் வாழ்வாதாரத்தில் அடி விழ தொடங்கியிருக்கிறது. சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அரச ஆதரவோடு மயிலத்தமடு மாதவனை விவசாயிகள் கால்நடைகளை மேய்த்து வரும் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து குடியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் . இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு இலங்கை மகாவலி அதிகாரசபை ,இலங்கை இராணுவம் , பௌத்த பிக்குகள் ,கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆகியோர் ஆதரவு வழங்குகிறார்கள்.

மேய்ச்சல் நிலங்களை விட்டு தமிழ் பண்ணையாளர்களை வெளியேற்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது.இதுவரை பண்ணையாளர்களின் பல நூற்றுக்கணக்கான மாடுகள் சுட்டும் வெட்டியும் மின்சாரம் பாய்ச்சியும் கொல்லப்பட்டுள்ளன. கடத்தப்பட்டுள்ளன காணாமல் ஆக்கப்பட்டுள்ளன பண்ணையாளர்கள் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுள்ளது .

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் எந்த பலனும் இல்லை இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் எனவும் குடியேற்ற வாசிகள் அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் ஏற்கனவே நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.

இருந்தபோதிலும் அந்த நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தொடர்ந்தும் பண்ணையாளர்களின் வசமுள்ள மேய்ச்சல் நிலங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள் , கொட்டில்களை அமைக்கிறார்கள் , காடுகளை அழிக்கிறார்கள் , விகாரை அமைக்கிறார்கள் இவை அனைத்துக்கும் இலங்கை மாவலி அதிகாரசபை ஆதரவு வழங்குகின்றார்கள். பாவம் எந்த ஆதரவும் இல்லாத தமிழ் பண்ணையாளர்கள் எல்லா வழிகளிலும் எதிர்த்து போராடி பலனேதும் இன்றி இன்றோடு 22 நாட்களாக சித்தாண்டி பகுதியில் வீதியில் கூடாரம் அமைத்து தமது வாழ்வாதரத்தை பாதுகாத்து தருமாறும் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறும் குரல் கொடுக்கிறார்கள் . இதுவரை யாரும் ஏன் என்று கேட்க்கவில்லை.

பொருளாதார நெருக்கடியில் நாடு மோசமான நிலையில் உள்ளது சரிந்து போன நாட்டை நிமிர்த்த போகிறோம் உற்பத்தி துறையை தூக்கி நிறுத்தப்போகிறோம் என்று கூறி உலகத்திடம் இலங்கை அரசு பிச்சை எடுத்து கொண்டே தங்கள் வாழ்வாதாரம் மூலம் தங்கள் சொந்தக்காலில் நிற்பதோடு மட்டுமல்லாமல் இந்த நாட்டின் பஞ்சம் போக்கவும் உழைக்கும் மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் கால்நடைகளை கொல்லவும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு ஆதரவு வழங்குகின்றது.

தமிழர் நிலங்களை அழிக்க வேண்டும் அந்த மண்ணை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கவேண்டும் என்ற சிங்கள பேரினவாத மன நிலையே இன்று மயிலத்த மடு மாதவனை பிரதேசம் மீது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பின் நோக்கமாகும். பசுக்களை கொல்லக்கூடாது என்று பௌத்த தர்மம் சொல்கிறது ஆனால் அந்த புனித பௌத்த தர்மத்தை பின்பற்றும் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் தமிழர்களுடையை சொத்து என்ற ஒரே காரணத்துக்காக வாய் பேசமுடியாத அந்த ஜீவன்களையும் விட்டு வைக்காது சுட்டும் வெட்டியும் கொன்று தமது இனவெறியை தீர்க்கிறார்கள்.