குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர், சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலை வைத்து வழிபட்ட விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

50 0

குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர் மற்றும், மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட குழுவினர் புத்தர்சிலை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன் ஆகியோரின் முறைப்பாட்டிற்கமைய, பொலிசாரால் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிசார், நீதிமன்றிடம் காலஅவகாசம் கோரிய நிலையில் இவ்வாறு தவணையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில், கடந்த ஜூலைமாதம் 23ஆம் திகதி கல்கமுவ சந்தபோதி தேரர், மறவன்புலவு சச்சிதானத்தம் உள்ளிட்ட குழுவினர்  புத்தர் சிலையைக் கொண்டுசென்று வைத்து பூசை வழிபாடுகள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த ஜூலைமாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்திருந்தனர்.

அந்தவகையில் குருந்தூர்மலையில் புதிதாக சிலைகள் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளவோ, மதக்கட்டுமானங்களோ மேற்கொள்ளக்கூடாதென்ற தடைகளிருக்கும்போது எப்படி இவ்வாறு புத்தர் சிலையை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளமுடியுமென குறித்த முறைப்பாட்டின்போது ரவிகரன் மற்றும், பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்ததுடன், இதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பி991/2023 இலக்க வழக்கு ,கடந்த செப்ரெம்பர் 07 முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பொலிசார், குறித்த வழக்குத் தொடர்பாக தாம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காக கால அவகாசம் தருமாறும் நீதிமன்றிற்குத் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு  தவணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமக்கெதிராக எதிர்த்தரப்புக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், தாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது பொலிசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் முறைப்பாட்டாளர்களில் ஒருவரான துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.