சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பதால் நீங்கள் கருதுவது என்ன?

65 0

தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் ‘சமாதானத்தை கட்டியெழுப்புதல்’ என்பதால் நீங்கள் கருதுவது என்ன? என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, சுவிற்ஸர்லாந்து தூதுவர் மொமினிக் ஃபக்ளெர் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களுடனும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவை மேற்கோள் காட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“அமைச்சரே, தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் ‘சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்’ என்பதால் நீங்கள் கருதுவது என்ன என்று விளக்க முடியுமா? உண்மையைக் கண்டறியும் நோக்கில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றும் அவர் வினவியுள்ளார்.

மேலும், “நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்குரிய அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக உங்களுடைய அரசாங்கம் அதன் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா? பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய எந்தவொரு செயன்முறை என்றாலும், அதுகுறித்து அவர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் அல்லவா?

சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான செயன்முறை செயற்திறன் மிக்கதாக அமைய வேண்டுமாயின், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்கு கொண்டுவருவது அவசியமல்லவா?” என்றும் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.