இனங்களுக்கு இடையில் நிலவும் அச்சத்தைக் களைவதில் அரசியல்வாதிகள் தோல்வி

87 0

நாட்டில் இனங்களுக்கு இடையில் நிலவுகின்ற அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவற்றைக் களைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அனைத்து சமூகங்களினதும் அச்சமூகத்தலைவர்களினதும் கடமையாகும்.

ஆனால் இதில் பெரும்பாலான அரசியல்வாதிகள் தோல்வியடைந்திருப்பதுடன் மாத்திரமன்றி, மக்களின் அச்சத்தைத் தூண்டி, அதனைத் தமது அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர் என்று உலகத்தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உலகத்தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது

நாகதீப ரஜமகா விகாரையின் வணக்கத்துக்குரிய நவடகல படுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தேரர் நயினாதீவுக்கு வருகைதந்து 50 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி நடத்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வை நாம் மகிழ்ச்சியுடன் நினைவுகூருகின்றோம். அப்பகுதியில் வாழும் தமிழ்மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள், ஏனைய இன, மத சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். கண்டிய நடனம் மற்றும் தமிழ் வாத்தியக்கருவிகளின் பாரம்பரிய இசை ஆகியவற்றுடன் திஸ்ஸநாயக்க தேரர் வரவேற்கப்பட்டார். ஏனைய மதத்தலைவர்களால் ஆற்றப்பட்ட உரைகள் உள்ளடங்கலாக இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் குறித்த தேரர் மீது உள்ளுர் சமூகம் கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையுமே வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் மதவழிபாட்டு நோக்கிலன்றி, மதரீதியான மேலாதிக்கத்தைத் திணிப்பதுடன் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் வகையில் தீடிரென பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படும்போது தான் அப்பகுதிகளில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்துக்களின் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு, அங்கு பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும்.

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பௌத்த விகாரைகள் அமைந்துள்ள பகுதிகளைச் சூழவுள்ள பரந்த நிலப்பரப்பு அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன் அந்நிலப்பகுதியில் பொருளாதாரம்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது மத ஒருமைப்பாட்டிலும், நல்லிணக்கத்திலும் மிகத்தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்விவகாரம் பல சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் அவதானத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கையிலும் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் இனங்களுக்கு இடையில் நிலவுகின்ற அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவற்றைக் களைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அனைத்து சமூகங்களினதும் அச்சமூகத்தலைவர்களினதும் கடமையாகும். ஆனால் இதில் பெரும்பாலான அரசியல்வாதிகள் தோல்வியடைந்திருப்பதுடன் மாத்திரமன்றி, மக்களின் அச்சத்தைத் தூண்டி, அதனைத் தமது அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.