அரச வருமானத்தை அதிகரிக்க மக்கள் மீது வரிகளை சுமத்தப் போவதில்லை

68 0

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனினும், இவ்வாண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும் 100 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற வேண்டியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய உற்பத்திக்கு சமாந்தரமாக கடந்த ஆண்டு அரச வருமானம் சுமார் 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாகவே பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும், இவ்வாண்டு அரச வருமானம் சற்று உயர்வடைந்துள்ளது.

இந்த ஆண்டு எமது இலக்கை அடைவதற்கு  இன்னும் 100 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட வேண்டியுள்ளது.

இதற்காக மக்கள் மீது மேலும் வரிச் சுமையை சுமத்த நாம் எதிர்பார்க்கவில்லை. மாறாக, வரிச் சுமைகளை படிப்படியாக குறைப்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம். இதற்காக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.

எதிர்வரும் புதன்கிழமை (19) ஜனாதிபதி செயலாளர் தலைமையில், துறைசார் நிபுணர்களை அழைத்து இது தொடர்பில் விசேட கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய வருமான வரி திணைக்களத்தினால் முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படும் என்றார்.