ஈழத்தமிழின அழிப்புக்குச் சித்திரவதைகளையே அரசியலாகக் கடைபிடிக்கும் சிறிலங்கா மனிதாயத்திற்கு எதிரான குற்றவாளி!

162 0

Press Release
26.06.2023

ஈழத்தமிழின அழிப்புக்குச் சித்திரவதைகளையே அரசியலாகக் கடைபிடிக்கும் சிறிலங்கா மனிதாயத்திற்கு எதிரான குற்றவாளி!

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. வின் அனைத்துலக ஆதரவு நாளான இன்று சித்திரவதைகளால் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கக் கோருகின்றோம்.

‘சித்திரவதை – மனிதாயத்திற்கு எதிரான குற்றம்’ என்ற மையக்கருவில் இன்று யூன் 26 சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக ஆதரவு நாளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கிறது. இந்நாளில் சித்திரவதைகளையே அரசியல் கொள்கையாக்கி ஈழத்தமிழர்களை இனவழிப்புக்கு உள்ளாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களை நாள்தோறும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதுவித அச்சமுமின்றி செய்துவருகிறது. இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளும் அனைத்துலக சித்திரவதைகளுக்கு எதிராகப் போராடும் அமைப்புக்களும் தனியாட்களும் சிறிலங்காவை மனிதாயத்திற்கு எதிரான குற்றவாளி என்பதை உலகுக்கு வெளிப்படுத்தி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான புனர்வாழ்வையும் புனரமைப்பையும் அவர்கள் பெற உதவுமாறு தாயகத்திலும் உலகெங்குமுள்ள நாடுகளிலும் உள்ள ஈழத்தமிழர்கள் இன்றைய நாளில் மீளவும் வலியுறுத்திக் கேட்டுநிற்கின்றனர் என்பதை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் சித்திரவதைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் உலக அமைப்புக்களினதும் உலக மக்களினதும் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றது.

1987ம் ஆண்டு யூன் மாதம் 26ம் நாளில் ஐக்கியநாடுகள் சபையின் சித்திரவதைகள் மற்றும் கொடுமையான மனிதத்தன்மையை அழிப்பதற்கு அல்லது தரங்குறைப்பதற்கு அல்லது தண்டிப்பதற்கு எதிரான மரபுசாசனம் (The UN Convention Against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment ) உருவாக்கப்பட்டு 173 நாடுகளால் ஏற்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் யூன் 26ம் நாளை சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக ஆதரவு நாளாக 1997 முதல் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்து வருகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பக மையத்தின் ஆசிய உதவி இயக்குநர் மீனாட்சி கங்குலியின் [1]  இவ்வாண்டு மே மாதம் 23ம் நாள் முள்ளிவாய்க்கால் யுத்த வருடாந்த நினைவேந்தல் அறிக்கையிலும்  இன்னமும் நீதி கிடைக்கவில்லை – ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக் கூறவைக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செயலேதும் செய்யாது இருக்கிறது’ என்பதே  தலையங்கமாகவே அமைந்துள்ளமை, எவ்வளவு தூரத்திற்குச் சிறிலங்கா அனைத்துலக சட்டங்களுக்கும் அனைத்துல நிறுவனங்களுக்கும் அமைய மறுக்கும் உலகின் சர்வாதிகார ஆட்சியாளராக உள்ளது என்ற உண்மையை உலகுக்கு மீளவும் நிரூபித்துள்ளது.  அவ்வறிக்கையில் குற்றங்களைச் செய்த சில அரசாங்க அலுவலர்களே அரசாங்கத்தில் இன்றும் அரசியல் அதிகாரம் அளிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அல்லது சிறிலங்கா இராணுவத்தில் மூத்த பதவிகளில் உள்ளனர் என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிகாரிகள் தமிழர்களின் நிலங்களையும் இந்து ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமித்தோ அல்லது அபகரித்தோ வருகின்றனர் என்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதே வேளை சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டில் நடந்த போர் பற்றிய நீதி விசாரணைகளை முன்னெடுக்க எந்தவிதமான விருப்புமின்றி இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடங்களில் நீதி விசாரணையைத் தேட வேண்டிய நிலையில் உள்ளனர்.

வெளியாரினதும் அரசாங்கத்தினதும் கலப்பு நீதியாளர்கள் மூலம் யுத்தக்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்காவுடன் செய்த உடன்படிக்கையில் இருந்து சிறிலங்கா வெளியேறியுள்ளதால் ‘ஆதாரங்களைச் சேகரித்து’ எதிர்கால விசாரணைகளைத் தானே தொடர்வதற்கான பொறுப்பான வேலைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடங்கியுள்ளது.  இந்நிலையில் சிறிலங்கா சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ‘உண்மைகளையும் புனர்வாழ்வளிப்புக்களையும் கண்டறிவதற்கான ஆணைக்குழுவொன்றை அமைப்பதாகக் கூறி வந்தாலும், அவரே முன்னைய உள்ளூர் விசாரணை ஆணையகங்கள் தெரிவித்த எல்லா விதந்துரைகளுமே கவனத்தில் கூட எடுக்காத நிலையில், அவரின் இந்த அறிவிப்பானது நீதியை முன்னெடுப்பதற்குப் பதிலாக நீதியை ஓரங்கட்டுகின்ற செயற்பாடாகவே உள்ளது.

சிறிலங்காவில் பல மக்கள் இன்றுவரை அனுபவித்து வரும் நீதி கிடைக்காத துன்பநிலைக்கு அந்த பாரிய  கொடிய வன்முறைகளை விசாரித்து நீதி வழங்குவதற்கு எதுவித முயற்சியும சிறிலங்கா செய்யாத வரை உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஆதாரங்களைச் சேகரிக்கும்’ செயற்திட்டத்துடன் சேர்ந்து செயற்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியக பொறிமுறைகளால் நீதியைப் பெற உதவ வேண்டும்’ என்ற நெறிப்படுத்தலும் மனித உரிமைகள் கண்காணிப்புகள் மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச்சபையும் அதனது மார்ச் 23ம் திகதிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவுக்கான அறிக்கையில் [2]  சிறிலங்கா தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசசிங்கம் இனப்படுகொலை, திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் கடற்படையினரால் இனப்படுகொலை,  மிருசுவிலில் தமிழ்ச்சிறுவர்கள் உட்படத் தமிழர்களை மிருசுவிலில் இனப்படுகொலை செய்து சிறிலங்கா நீதிமன்றத்தாலேயே தண்டனைத் தீர்ப்புப் பெற்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரத்தநாயக்காவுக்கு 2020 இல் சிறிலங்கா சனாதிபதி மன்னிப்பு அளித்து விடுதலைசெய்து சட்டத்தின் ஆட்சியையே அவமதித்தது போன்ற பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்கா எந்த உண்மைகளையோ அல்லது புனர்வாழ்வுகளையோ கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கு முன்னர், அது உரோம் எழுத்துருவுச்சட்டத்தில் (Rome Statute and implement)  கையொப்பமிட்டு அதன் நடவடிக்கைகளை ஏற்று அனைத்துலக நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் வரவைக்க வேண்டும் என்ற முக்கியமான விதந்துரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவுக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை விடுத்துள்ளது. இது ஒரு முக்கியமான கோரிக்கை என்பதை இன்றைய நாளில் நாமும் வலியுறுத்த விரும்புகின்றோம்.