வறுமையில் வாழும் மக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் நடவடிக்கை என்ன? : சஜித் கேள்வி!

69 0

நாட்டில் வறுமையானவர்கள் தொடர்பாக சரியான புள்ளிவிபரங்களை மேற்கொள்ளத அரசாங்கத்தினால் அஸ்வெசும திட்டத்தை எவ்வாறு சரியான முறையில் செயற்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

தெபரவெவ, உடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்து, உடனடியாக செய்ய வேண்டிய பிரதான செயற்பாட்டை அவர் இன்னமும் செய்யவில்லை.

இந்த நாட்டின் வறுமையில் வாழும் மக்களை அடையாளம் காண அவர் எந்தவொரு நடவடிக்கைகையயும் மேற்கொள்ளவில்லை.

மக்கட் தொகைக் கணக்கெடுப்புத் திணைக்களத்தின் ஊடாக அந்தப் பணி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஒரு வீட்டின் வரவு – செலவு எவ்வாறு உள்ளதென்ற புள்ளிவிரபரங்களை ஜனாதிபதி எடுக்கவில்லை.

இவ்வாறு எதனையும் மேற்கொள்ளாமல் அஸ்வெசும திட்டத்தில் எவ்வாறு உரிய பயனாளிகளை சேர்க்க முடியும்?

லேன் ஏசியா நிறுவனமானது, இந்நாட்டில் 30 இலட்சமாக காணப்பட்ட வறுமையானவர்களின் எண்ணிக்கை 70 இலட்சமாக உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

14 வீதமாக காணப்பட்ட வறுமை நிலைமை 31 வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க, வறுமையான 70 இலட்சம் பேரில், குறிப்பிட்ட ஒரு தரப்பிற்கு மட்டும் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எந்தவொரு புள்ளிவிபரத்தையும் மேற்கொள்ளாமல், அரசாங்கத்தால் எவ்வாறு அஸ்வெசும திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்ய முடியும்? இதனால் இன்று, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு கிராமசேவகர் மட்டத்திலும் வாழும் வறுமையானவர்களை முதலில் அடையாளம் கண்டு, அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.