யாழில் தீக்காயங்களுக்கு இலக்காகி குடும்பப் பெண் உயிரிழப்பு

68 0

யாழில் தீக்காயங்களுக்கு இலக்காகி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் (25.03.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 13ஆம் திகதி அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற இரு பிள்ளைகளின் தாயொருவர் எரிகாயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் (24.06.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ பரவியுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.எனினும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த பெண்ணை எரிகாயங்களுடன் மீட்ட இடத்தில் மண்ணெண்ணெய் போத்தலோ, கலனோ இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், உயிரிழந்த பெண்ணின் கணவருடன் நெருக்கமான இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர் போதைப்பொருள் வாங்குவதற்காக சில நாட்களாக, உயிரிழந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளதாகவும், இந்த விடயம் கணவருக்கு தெரியவர அந்த இளைஞரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கண்டித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த பெண்ணின் எரிகாயங்களுக்கு அந்த இளைஞரே காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், அயலவர்களும் அதே விடயத்தை கூறியுள்ளதாக தெரியவருகிறது.இதனையடுத்தே குறித்த இளைஞர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இறப்பு விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.