தடைகாலம் முடிந்தது- நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற பாம்பன் மீனவர்கள்

58 0

தமிழகத்தில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். தடை காலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

சிலர் குடும்ப சூழ்நிலை கருதி வேறு வேலைகளுக்கும் சென்றனர். இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்று இரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.