மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழகம் கடனில் தத்தளிக்கிறது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

213 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் நிதி மேலாண்மை மிகவும் மோசமாகிவிட்டது. அதிமுக ஆட்சியால் மட்டும் 1.56 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன் உருவாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கொடுப்பதற்கு உரிய டெண்டர் விட்டு கொள்முதல் கூட செய்ய முடியாமல் தத்தளித்து நிற்கிறது. முதியோர் பென்ஷன் உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் நிதி பற்றாக்குறையால் அறவே முடங்கிக் கிடக்கின்றன. எந்த புதிய மின்திட்டங்களையோ, மெகா குடிநீர் திட்டங்களையோ நிறைவேற்ற முடியாமல் இந்த அரசு அந்தரத்தில் தொங்குகிறது. தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.35 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை சுமத்தி, அதிமுக அரசு நிதி மேலாண்மையில் ஒரு கோமாளித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது.

அதிகாரபூர்வமாக ரூ.2.52 லட்சம் கோடி ரூபாய் கடன் என்றாலும், பொதுத்துறை நிறுவனங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட மற்ற கடன்களையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி ரூபாய் வரை மாநில அரசு கடன் அதிகரித்து விட்டது. தமிழக நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தும் இதுவரை அதிமுக அரசு அப்படியொரு அறிக்கையை வெளியிட்டு நிதி மேலாண்மை விஷயத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையை மக்களுக்கு அறிவிக்கவில்லை. அதனால் திமுக சார்பில் நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தலைமையில் மாநில அரசின் நிதி நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தியிருக்கிறேன். அந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’

சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக வேட்பாளர் யார் என்பதை திமுக தலைமை பரிசீலித்து முடிவு செய்யும். தங்கச்சிமடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். சென்னையில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதுமே கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இப்போது மட்டும் அல்ல, ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாக இருந்தே தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருந்தது. சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை என்று கூறினார்.