ரஷ்ய சிப்பாயை சிறைப்பிடித்ததாக வாக்னர் குழு அறிவிப்பு

221 0

உக்ரேனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபட்டுள்ள வாக்னர் தனியார் கூலிப்படையினர், ரஷ்ய இராணுவ சிப்பாய் ஒருவரை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியத்தில் தனது குழுவினரை தாக்குவதற்கு முயற்சித்ததாக மேற்படி சிப்பாய் மீது வாக்னர் குழு குற்றம் சுமத்தி வருகிறது.

உக்ரேனில் தமது போராளிகளின் அதிக மரணங்களுக்கு ரஷ்ய இராணுவத் தளபதிகள் காரணம் என வாக்னர் குழுவின் ஸ்தாபகர் யெவ்ஜெனி பிரிகோஜின் பல மாதங்களாக குற்றம் சுமத்தி வருகிறார்.

உக்ரேனியப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பின்வாங்கும் வாக்னர் குழுவினர் வெளியேறக்கூடிய பாதைகளில் ரஷ்ய படையினர் கன்னிவெடிகளை புதைத்ததாகவும் அண்மையில் பிரிகோஜின் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இராணுவ சிப்பாய் ஒருவரை வாக்னர் குழுவினர் சிறைப்பிடித்தமை இதுவே முதல் தடவையாகும்.

சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய சிப்பாய் எனக் கூறப்படுபவரை விசாரணை செய்யும் வீடியோ ஒன்றை பிரிகோஜின் வெளியிட்டுள்ளார்.

தான் ரஷ்ய இராணுவத்தின் 72 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் என அச்சிப்பாய் கூறியுள்ளார். வாக்னர் குழுவின் கார் ஒன்றை தான் சுட்டதாகவும், தனிப்பட்ட வெறுப்பு இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.