அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மைக் பென்ஸ் போட்டி: ஆவணங்களை தாக்கல் செய்தார்

158 0

அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ், எதிர்வரும்  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு உத்தியோகபூர்வமாக ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார்.

63 வயதான மைக் பென்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 2017 முதல் 2021 வரை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்பும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இண்டியானா மாநில முன்னாள் ஆளுநரும் அமெரிக்க காங்கிரஸ் முன்னாள் அங்கத்தவருமான டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலத்தில் அவரின் தீவிர விசுவாசியாக விளங்கினார். எனினும் 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு நடத்திய வன்முறைகளையடுத்து ட்ரம்பிடமிருந்து அவர் விலகினார்.

2020 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியீட்டியமைக்காக உத்தியோகபூர்வமாக சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு காங்கிரஸில்; 2021 ஜனவரி 6 ஆம் திகதி  நடைபெற்றது. அவ்வேளையில் பைடனின் வெற்றியை நிராகரிக்குமாறு அப்போதைய  உப ஜனாதிபதி மைக் பென்ஸிடம் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால். ட்ரம்பின் கோரிக்கையை பென்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், மைக் பென்ஸை தைரியமற்றவர் என ட்ரம்ப் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ்,  ஐநாவுக்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹாலே, முதலானோரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றனர்.  நியூ ஜேர்ஸி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியும் அடுத்தவாரம் இப்போட்டியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.