ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

391 0

ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன் என்று நெடுவாசல் கிராமத்தில் நடந்த போராட்ட களத்திற்கு நேற்று இரவு வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

22-வது நாளாக நெடுவாசல் கிராமத்தில் நாடியம்மன் கோவில் திடலில் நடந்த போராட்ட களத்திற்கு நேற்று இரவு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

கடந்த 22 நாட்களாக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வணங்குகிறேன். மத்திய அமைச்சராகவோ, அரசியல் கட்சியை சார்ந்தவனாகவோ, சமரசம் செய்யவோ, பேசி விட்டு செல்லவோ நான் இங்கு வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். அதேநேரத்தில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் வரவில்லை.

என்னுடைய கருத்தை பதிவு செய்யவே வந்துள்ளேன். கடந்த 4-ந்தேதி மதுரையில் 4 மணி நேரம் போராட்டக்குழுவிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது போராட்டக் குழுவினர் விடுத்த தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பதில் விளக்கம் அளித்தனர். எந்த திட்டத்தையும் மோடி தலைமையிலான மத்திய அரசு திணிக்காது.

ஒட்டுமொத்த நலன் இருப்பின் நன்மை கருதி அந்த திட்டம் வந்தால் தவறில்லை. நெடுவாசல் பசுமை நிறைந்த பகுதியாகும். விவசாயத்தில் லாப, நஷ்டம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது எனக்கு தெரியும். இந்த திட்டம் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டதல்ல. முந்தைய அரசு கொண்டு வந்தாலும் அவர்களை நான் குற்றம் சொல்லவில்லை.

தவறான புரிதல் காரணமாக எதிர்ப்பு உணர்வில் உள்ளீர்கள். மீத்தேன் திட்டம் வேண்டாம் என்று போராடியபோது போராட்டக்காரர்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். போராட்டக்காரர்களின் உணர்வுகளை புரிந்து அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல் நெடுவாசல் போராடக்குழுவினர் சம்மதித்தால் வருகிற 15 அல்லது 16-ந்தேதி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்றமாட்டேன். உங்களை தாயாகவும், சசோதரர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும் நினைத்து இதை கூறுகிறேன்.

நான் உங்களை நம்புகிறேன். மத்திய அமைச்சரை போராட்டக்குழுவினர் சந்திக்க செல்லும் போது போராட்டத்தை நிறுத்தி விட்டு உங்களை சந்திக்க வந்துள்ளோம் என்று கூறினால் நல்லதா? போராட்டம் தொடர்ந்து நடக்கிறது என்று சொல்வது நல்லதா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எனவே ஒருதாய் வயிற்றில் பிறந்துள்ளவர்களாய் நினைத்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து அவர் வடகாடு, நல்லாண்டார் கொல்லை ஆகிய பகுதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள், எரி வாயு குழாய்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் நேற்று முன்தினம் நடந்த ஒப்பாரி போராட்டத்தின்போது மயங்கி விழுந்து இறந்த பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.