ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் யார்?

305 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் யார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் அங்கு பலமுனை போட்டி உருவாகி இருப்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போதே அரசியல் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது.கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (12-ந்தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றதால் வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றுள்ள இந்த தொகுதி தேர்தல் அரசியல் கட்சிகளிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிலும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் முடிவுதான் பல கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமையும்.இந்த தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் வலுவான நிலையில் இருக்கிறது. எனவே தொகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும்.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை இப்போது 3 அணிகளாக பிளவுபட்டு நிற்கின்றன. சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். தலைமையில 2 அணிகள் உள்ளன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்.இந்த 3 அணிகளுமே அ.தி.மு.க. தொண்டர்களில் தங்களுக்கென்று தனி ஆதரவு வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளன.இந்த மூன்று அணிகளுக்குமே இந்த தேர்தல் ஒரு அக்னிபரீட்சையாகத்தான் இருக்கும்.சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வை விட அதிக வாக்குகளை பெறாவிட்டால் ஓ.பி.எஸ். அணி மற்றும் தீபாவின் அரசியல் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக் குறியாகி விடும்.

அதே நேரத்தில் சசிகலா அணி குறைந்த வாக்குகளை பெற நேர்ந்தால் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை சந்திக்கும்.எனவே மூன்று அணிகளை முடிந்தவரை மோதிப் பார்த்து விடுவது என்ற உணர்வில்தான் களம் இறங்கும்.சசிகலா தரப்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.தினகரன் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பு இழுபறியானால் வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதற்காக அந்த தொகுதியில் செல்வாக்கு பெற்ற சிலரது பெயரும் பரிசீலனையில் உள்ளது.

ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக நீண்ட காலமாக இருந்தவர். மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்.ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றவர். அமைச்சராகவும் இருந்தவர். தொகுதியில் பிரபலமானவர். எனவே அவரையே நிறுத்தலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது வாரிசாக கட்சியை வழிநடத்த ஒருவர் இல்லையே என்ற ஏக்கம் உண்மையான ஜெயலலிதா விசுவாசிகளிடம் ஏற்பட்டது.அதன் விளைவாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை அரசியலுக்கு இழுத்து வந்தனர்.

எம்.ஜி.ஆர். – அம்மா- தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் இறங்கி இருக்கும் தீபா ஆர்.கே.நகரில் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார்.அ.தி.மு.க. பிளவு தி.மு.க. தரப்பை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஏற்கனவே கடந்த பல தேர்தல்களில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான் இந்த தொகுதியை மாறி மாறி கைப்பற்றி வருகின்றன.கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக சிம்லாமுத்துச் சோழன் போட்டியிட்டார். இந்த முறையும் அவரையே போட்டியிட வைப்பதா? அல்லது வேறு வேட்பாளரை தேர்வு செய்யலாமா என்று தி.மு.க. மேலிடம் ஆலோசித்து வருகிறது.

தி.மு.க.வுக்கும் இது ஒரு பலப்பரீட்சைதான். இந்த தொகுதியை கைப்பற்றினால் தான் ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்துக்கு தி.மு.க.தான் மாற்று என்பதை உறுதிப்படுத்த முடியும்.இது தவிர மக்கள் நலக் கூட்டியக்கம், பா.ம.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளும் போட்டியிட உள்ளன.பலமுனை போட்டி உருவாகி இருப்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போதே அரசியல் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.