ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கட்சி சின்னம் பற்றி ஓரிரு நாளில் முடிவு – தீபா

230 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தீபா, ஓரிரு நாளில் கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி அறிவிப்பேன் என்று கூறி உள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தீபா இன்று அவரது வீட்டில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கே:- ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளீர்கள். சசிகலாவிடம் ஆதரவு கேட்பீர்களா?

ப:- சசிகலாவை மக்கள் ஏற்கவில்லை. உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் அவரை ஏற்கவில்லை. எனவே எனக்கு அவர்களின் ஆதரவு தேவையில்லை. அரசியலில் அவர்களை எதிர்ப்பதுதான் எனது முதல் படியாக இருக்கும்.

கே:- தேர்தலில் தி.மு.க.வை எதிர்க்க என்ன வியூகம் வகுத்துள்ளீர்கள்?

ப:- வியூகம் எதுவும் வகுக்கவில்லை. ஆர்.கே.நகர் என்பது அம்மாவுடைய இடம். அங்கு வேறு யாருக்கும் இடம் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மாவின் வாரிசாக மக்கள் என்னை உறுதியாக தேர்ந்தெடுப்பார்கள்.

கே:- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு இன்னும் நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை. நிர்வாகிகள் பட்டியலை எப்போது அறிவிப்பீர்கள்? நீங்கள் போட்டியிடும் சின்னம் பற்றி முடிவு செய்து விட்டீர்களா?

ப:- கட்சி நிர்வாகிகள் பட்டியலை ஓரிரு நாளில் வெளியிடுவேன். கட்சியின் சின்னம் பற்றியும் ஓரிரு நாளில் அறிவிப்பேன். இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடம் அறிவுரை கேட்டு அவர்களின் ஆலோசனையின் பேரில் செயல்படுவேன்.

கே: ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். வெளிநாட்டு மருத்துவர் ஜான் பீலே விளக்கம் அளித்துள்ளார். இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

ப:- நான் அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. எய்ம்ஸ் அறிக்கையில் இந்த நாள் இந்த மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தார். அந்த நாள் அந்த மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தார். குடும்பத்தினர் உடன் இருந்தார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால் குடும்ப உறுப்பினர் யாரும் இல்லை. எனவே அந்த அறிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த அறிக்கை பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.
இவ்வாறு தீபா கூறினார்.