பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் மனு

244 0

சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை தேர்தல் கமி‌ஷன் நிராகரிக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாருக்கு அவரது வக்கீல்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க பொதுக்குழுவில் அவரது பெயரை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அப்போது அ.தி.மு.க ஒன்றுபட்ட நிலையில் இருந்தது.அதன் பிறகு சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க திட்டமிட்டதால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவானது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிவகளை சசிகலா நீக்கினார். மேலும் அ.தி.மு.க துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரனை நியமித்தார்.

இந்த நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுத்தனர். அ.தி.மு.க வில் 5 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவரை மட்டுமே பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடியும் என்று கட்சி விதியில் கூறப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமி‌ஷன், இது பற்றி பதில் அளிக்கமாறு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால் இந்த நோட்டீசுக்கு சசிகலா பதில் அளிக்காமல் அ.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதில் அளித்தார். அதில் சசிகலா முறைப்படி அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களால் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார், எனவே அவர் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று கூறியிருந்தார்.டி.டி.வி. தினகரனின் பதிலை ஏற்க தேர்தல் கமி‌ஷன் மறுத்துவிட்டது. சசிகலாதான் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது.

இதையடுத்து சசிகலா சார்பில் பதில் மனு தயார் செய்யப்பட்டது. அந்த மனுவில் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வக்கீல்கள் சென்று கையெழுத்து பெற்றனர்.இன்று சசிகலாவின் பதில் மனுவை டெல்லியில் தேர்தல் கமி‌ஷனிடம் வக்கீல்கள் ராஜேஷ்குமார், பரணிகுமார் ஆகியோர் அளித்தனர். மொத்தம் 70 பக்கங்களில் சசிகலா தனது பதிலை தெரிவித்து இருந்தார்.

அதில் அவர், தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சரியானது தான், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.மேலும் தற்போது எனக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் எல்லாம் என்னை தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள் என்பதை தேர்தல் கமி‌ஷன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சசிகலாவின் பதில் மனுவை தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக பரசீலனை செய்து வருகிறது. அரசியல் கட்சிகளின் பொதுவான விதி அடிப்படையிலும், அ.தி.மு.கவின் கட்சி விதி அடிப்படையிலும் இரு விதமாக தேர்தல் கமி‌ஷன் பரிசீலித்து வருகிறது.கட்சி விதியின் படி பார்த்தால் வருகிற மார்ச் 31-ந் தேதிதான் சசிகலாவின் அ.தி.மு.க உறுப்பினர் பதவி 5 ஆண்டுகளை எட்டுகிறது. அதற்கு முன்னரே அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் அது செல்லுமா? செல்லாதா என்று தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யலாம். இது தவிர பொதுவான விதிகளின் அடிப்படையில் அவரை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளுமா என்பதும் தெரியவில்லை.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் கமி‌ஷன் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் இரு அணியினரும் வேட்பு மனுதாக்கல் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருவார்கள். எனவே தேர்தல் கமி‌ஷன் முடிவைப்பொறுத்தே இரட்டை இலை யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தால் கட்சியில் அவரால் அறிவிக்கப்பட்ட நீக்கம், நியமனம் போன்றவை செல்லாததாகி விடும். ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் அவர்களது பொறுப்பு தானாகவே வந்துவிடும்.இது போன்ற குழப்பமான நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும், அல்லது முடக்கப்படுமா? என்ற பதைபதைப்பு இரு அணியினரிடமும் ஏற்படுத்தி உள்ளது.