வடக்கு, கிழக்கில் சட்ட விரோத நிர்மாணங்கள் ; முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் – விதுர விக்கிரமநாயக்க

61 0

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்படும் பகுதிகளில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் மற்றும் தனியார் காணிகளில் பௌத்த விகாரைகள் நிறுவப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள் நீடித்தமையால் தொல்பொருள் பகுதிகள் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை.

தொல்பொருள் என்பது நாட்டின் மரபுரிமைகள் சார்ந்த விடயமாகும். அதற்கும் இன அடையாளங்களுக்கும் தொடர்பில்லை.

இந்நிலையில் நாம், வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற தொல்பொருளியல் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து அடையாளங்களும் சட்டத்திற்கு முரணானவையாகும்.

ஆகவே அவை தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைக் கோரியுள்ளேன் அந்த அறிக்கை கிடைத்ததும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குருந்தூர்மலை, வெடுக்குநாறி தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் வந்தபின்னரே இறுதியான தீர்மானத்தினை எடுக்க முடியும்.

கிளிநொச்சி உருத்திரபுரம் கந்தசுவாமி கோவில், திருக்ணேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருளியல் அடையாளங்கள் காணப்படுவதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சில இடங்களில் தொல்பொருளியல் பகுதிகளில் கோவில்கள் உள்ளிட்ட நிர்மாணங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவை தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன், வடக்குரூபவ்கிழக்கில் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

அவர்களின் அடையாளங்களும் காணப்படுகின்றன. ஆகவே அந்த வரலாற்று தகவல்களையும் பாதுகாக்க வேண்டியது கடமையாகின்றது. அதுபற்றி யாரும் அச்சமடைய வேண்டியதில்லை என்றார்.