பிரான்சில் பேரெழுச்சியடைந்த தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

402 0

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2023) வியாழக்கிழமை பேரெழுச்சி கொண்டது.

மதியம் 13.00 மணியளவில் பாரிஸ் நகரின் Place de la Republique பகுதியில் ஆரம்பமாகி Place de la Bastille பகுதியில் நிறைவடைந்தது.

Place de la Bastille பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளர் திரு.சசி அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர் ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளை இழந்த மற்றொரு குடும்ப உறுப்பினர் மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து ஒவ்வொருவராக உணர்வோடு மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர். வீரம்செறிந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் நினைவேந்தலுக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொபினி நகரபிதா, நோசிலுசெக் நகர பிதா, நோசிலுசெக் துணை நகர பிதா, பொண்டி துணை நகரபிதா,லாகூர்நொவ் மாநகரசபை உறுப்பினர் ஆகியோரோடு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சு வாழ் தமிழ் மக்களிற்கான நாடாளுமன்ற ஆய்வுக் குழுவின் தலைவர் திருமதி மரி ஜோர்ஜ் பூபே (Mme Marie George Buffet) அவர்களும் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்தியதோடு தமது ஆதரவுகளை அனைவரும் அரங்கில் தெரிவித்துச் சென்றிருந்தனர்.

இவர்களோடு குர்திஸ்தான் மக்களும் பேரணியில் கலந்துகொண்டதுடன் மவர்வணக்கம் செலுத்தி அரங்கில் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழக கலைஞர்கள் மற்றும் தமிழ்ச்சோலை மாணவர்கள் சிறிலங்கா இராணுவ அடக்குமுறை, இலங்கையின் சமகால அரசியலை ஊர்திப் பவனியில் இரண்டு பிரிவுகளாக ஆற்றுகைப்படுத்தியிருந்தமை அனைவரையும் கவர்ந்திருந்தது.

புளோமெனில் தமிழ்ச்சோலை, கவின் கலையகம், திரான்சி தமிழ்ச்சோலை, குசான்வீல் தமிழ்ச்சோலை, மாணவ மாணவியரின் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த எழுச்சி நடனங்களும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தன.

ஒள்னேசுபுவா தமிழ்ச்சோலை மாணவர்களின் “மீண்டும் எழுவோம்” என்ற நாடகம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. நாடகத்தின் தொடர்ச்சியாக அமைந்த எழுச்சி நடனமும் நேர்த்தியாக அமைந்திருந்ததுடன் அனைவரையும் எழுச்சிகொள்ள வைத்தது.

முள்ளிவாய்க்கால் இறுதிவரை குடும்பத்தினரோடு பயணித்த சகோதரிகளான செல்வி நிலா, செல்வி அம்மு ஆகியோர் தமது அனுபவங்களை சாட்சியங்களாகத் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் பகிர்ந்திருந்தனர்.

தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் பிரெஞ்சு உரை,

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் திரு.சுந்தரவேல் அவர்களின் உரை, லாக்கூர்னோவ் மாநகரசபை ஆலோசகர் திருமதி சுகுனா அவர்களின் பிரெஞ்சு உரை ஆகியவற்றோடு, சிறப்புரையை முள்ளிவாய்க்கால் இறுதிவரை பயணித்த திரு. சின்னக்கிளி அவர்கள் ஆற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் முள்ளிவாய்க்கால் வரை தனது அனுபவங்களை சாட்சியமாகப் பகிர்ந்திருந்ததோடு, உலகத் தமிழர்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தால் தமிழீழம் விரைந்து வந்து சேரும் என்று ஓங்கிக் குரல் எழுப்பி அவருடைய உரை நிறைவடைந்தது.

முள்ளிவாய்கால் கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகி அமைதியாகச்சென்றபோது, குறித்த நேரத்திற்குள் இளையோர்கள் வரத் தொடங்கியிருந்தனர். அவர்களாகவே பதாதைகள் தேசியக்கொடிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். பேரணியில் சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டிய விடயங்களை ஏற்பாட்டாளர்களிடம் பெற்றுக்கொண்ட இளையவர்கள் சிறிது சிறிதாக அதனை குரலால் தந்திருந்தனர். ஆனால் சிலநிமிடங்கள் அது பெரும் எழுச்சியை ஏற்படுத்தவில்லை 15 நிமிடங்கள் எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை பெற்றோர்களுடன் வந்த பிள்ளைகளின் கோசங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இளையோரின் கோசங்களால் பெருவீதியால் சென்றவர்களையும், விடுமுறைநாள் என்பதால், வீதியோரம் இரு ஓரங்களிலும் இருந்த உணவுவிடுதிகளில் மக்கள் நிரம்பியிருந்தனர். எமது நீதிவேண்டிய கோசம் அவர்கள் எல்லோரையும் சென்றடைந்ததையும், எம்மவர்களால் வீதியோரங்களில் கொடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை விருப்பத்துடன் பெற்றுக்கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பயணித்துத் திடலை தமிழீழ தேசியக் கொடியுடனும் நீதிகேட்கும் கோசத்துடனும் இப்பேரணி சென்றடைந்தது. இதில் இணைந்தவர்கள் அதிகம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகள் குடும்ப உறவுகள், நண்பர்கள் 14 ஆண்டுகளுக்கு பின்பு அந்த வேதனைகளில் இருந்து மீண்டு தமக்கு நடந்ததை மறக்காது விடுதலை நீரோட்டத்தில் கலந்து கொண்டமை ஏற்பாட்டாளர்கள் மத்தியில் இன்னும் செய்ய வேண்டும் இலக்கை அடையும் வரை நாம் ஓயமாட்டோம் .இனி வரும் காலம் இளையோர் அரசியல்ரீதியாக கைகளில் எடுத்துக் கொண்டுள்ளதை இன்னும் ஓரமாய் நிற்கும் ஏனைய இளையோர்களும், அவர்களின் பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனையே நேற்றைய பேரணியில் பார்க்கக்கூடியதாக இருந்தது.

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்தோடு நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)