சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை – சி.தவராசா குற்றச்சாட்டு

325 0

வடமாகாண விவசாய அமைச்சின்  சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காக மாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கழிவு ஒயில் கலந்தமை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை  என வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்றைய தினம் நடந்தது. இதன்போதே எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கு வடமாகாண விவசாய அமைச்சுக்கு அதிகாரம் இல்லை.

மேற்படி நிபுணர் குழு உருவாக்கப்பட்டு 3 மாதங்களில் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் BTEX இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஆனால் BTEX பெற்றோலில் உள்ளது. ஒயிலில் இருப்பதில்லை.

மேற்படி நிபுணர் குழு 5 மாதங்களில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் உருவாக்கப்பட்ட அறிக்கையில் உள்ள முறைமையை பிழை என கூறிய வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு அது தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் கேட்கவில்லை.

அவுஸ்திரியா நாட்டிலிருந்து வந்த நிபுணர் குழு ஒன்று சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ள விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளது.

அந்த குழு யார்? அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? இலங்கை தர நிர்ணய சபை குடிநீரில் 0.2 மில்லி கிராம் அளவு கன ஒயில் இருக்கலாம் என நிர்ணயம் செய்துள்ளது. இதேவேளை மத்திய சுகாதார அமைச்சி 2 மில்லி கிராம் அளவு கன ஒயில் இருக்கலாம் என நிர்ணயம் செய்துள்ளது.

இதில் ஆக குறைந்த அளவான 0.2 மில்லி கிராம் அளவை நிர்ணயமாக எடுக்காமல் சுகாதார அமைச்சின் அளவை நிர்ணயமாக மாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர்குழு எடுத்தது எதற்காக? என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதுடன் வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் யாரையோ காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.