வடகொரியாவை சமாளிப்பது எப்படி?: அமெரிக்கா அதிபர் – ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை

250 0

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக ஏவுகணை பரிசோதனை நடத்தி வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுதம் மற்றும் அதிநவீன ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

அவ்வகையில், நேற்று வட கொரியா அடுத்தடுத்து பரிசோதித்த நான்கு ஏவுகணைகளில் மூன்று ஜப்பானுக்கு சொந்தமான கடல் பகுதியில் விழுந்தது.


இதுதொடர்பாக, வடகொரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அதிபர் கிம் ஜாங் உன்-னின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நமது ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது. இதையடுத்து, ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் அடுத்தகட்ட பணிகளை தொடருமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கொரியாவின் சவாலை சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷின்சோ அபே, வட கொரியாவின் அச்சுறுத்தல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னுடன் தொலைபேசி மூலம் பேசினார். நூறு சதவீதம் ஜப்பானுடன் அமெரிக்கா இணைந்திருக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

நானும் அமெரிக்காவும் ஜப்பானுடன் நூறு சதவீதம் இணைந்திருப்போம் என்ற தகவலை உங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள் என்றும் அவர் என்னை கேட்டு கொண்டார்’ என்று குறிப்பிட்டார்.

 

.