வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசிய விமான நிலையத்தில் கடந்த 6-2-2017 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக இரு பெண்கள் மற்றும் வட கொரியாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூலிப்படை மூலம் கிம் ஜாங் நாம்-ஐ தீர்த்து கட்ட வட கொரியாவை சேர்ந்த சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

அவரை கொல்வதற்காக உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘VX’ எனப்படும் கொடிய நச்சு ரசாயனம் பயன்படுத்தப்பட்டது பிரேத பரிசோதனையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில், பயங்கரமான ரசாயனத்தை இந்த படுகொலைக்கு பயன்படுத்தி இருந்ததை மலேசிய அரசு வன்மையாக கண்டித்தது.
மலேசியாவுக்கான வட கொரியா தூதரை உடனடியாக தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக தங்கள் நாட்டில் இருந்த மலேசிய தூதரை வட கொரியா வெளியேற்றியது. கிம் ஜாங் உன் படுகொலை தொடர்பாக வட கொரியா நாட்டை சேர்ந்த விமானி ஒருவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த மலேசிய அரசு அவரை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வட கொரியாவுக்கு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மலேசிய அரசின் செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மலேசியா நாட்டில் நடந்த சம்பவத்துக்கு முறையான வகையில் தீர்வு காணப்படும்வரை வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் இங்கிருந்து வெளியேற தற்கால தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

