தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு

222 0

வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கவுள்ள ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

அமெரிக்காவின் இந்த முயற்சியை தென் கொரியாவின் அண்டை நாடான சீனா, ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. இந்த கவன் அமைக்கப்பட்டால் கவனில் இருந்து வெளிப்படும் ராடார் கதிர்வீச்சால் சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக சீனா குறிப்பிட்டு வந்தது.

இந்த கவன்களை அமைப்பதற்கான பாகங்களும், மூலப் பொருட்களும் அமெரிக்காவில் இருந்து தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கான முயற்சியில் தற்போது அமெரிக்க ராணுவம் தீவிரமாக செயல்படுத்த அமெரிக்க ராணுவம் முனைப்பு காட்டி வரும் நிலையில் அமெரிக்காவின் முடிவை தீவிரமாக எதிர்ப்போம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

பீஜிங் நகரில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவான் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.