மாகாண பொலிஸ் தேவையில்லை’-சம்பிக்க ரணவக்க

253 0

வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, தேசிய பொலிஸே தேவையாகும். அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாகாண பொலிஸ் தேவையில்லை” என்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கோஷ்டியினரை வீரர்களாக்குவதற்கு  சிலர் முயலுகின்றனர். எனினும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாதாள உலகக்கோஷ்டியினரை முற்றாக  அழித்தொழிக்கவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹோமாகம, குடுமாதுவ பிரதேசத்தில், சனிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   “கடுவெலயில் கல்கூரி பிரச்சினையால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதாள உலகக்கோஷ்டியினரால் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளனர். மீரிகமவில் மண் பிரச்சினை காரணமாக 48 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.   “போதைப்பொருள் பிரச்சினை காரணமாக, அன்றுதோன்றிய பாதாள உலகக்கோஷ்டி, மண், கருங்கல் மற்றும் மணல்வரையிலும் வியாபித்துள்ளது.

“வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஆவா குழு எனும் பாதாள உலகக்கோஷ்டி உருவானது. புலி உறுப்பினர்கள் இருவர், ரி-56 ரக துப்பாக்கிகளுடன் மட்டக்களப்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர். இவற்றிலிருந்து, சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கும் காலம், மீண்டும் தலைதூக்கிவி ட்டது என்பது புலனாகின்றது.   “அவ்வாறான சக்திகளுக்கு பின்னால், அரசியல் பலம் இருக்குமாயின், அவற்றை தோற்கடிப்பதற்கு நீதிமன்றம், பொலிஸ் மற்றும் சமூகம் ஆகியன ஒன்றிணையவேண்டும்.   “பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் அனுசரனையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தில் என்ன இருக்கின்றது. இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது. சகல மாநிலங்களிலும் பயங்கரவாதம் தலைத்தூக்கிக்கொண்டிருக்கின்றது.   அந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமைக்கு பிரதான காரணம், மாநிலங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கியமையாகும். ஆகையால், அந்தநாட்டில் சட்டம் மற்றும் சமாதானம் சீர்குலையும் நிலைமைக்கு சென்றுவிட்டது.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை கொடுத்தால், சமயங் குழு, ஆவா குழு என்று இன்னும் பல பாதாள உலகக் கோஷ்டி உருவாகிவிடும்.    “பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வதனால் எவ்விதமான பிரயோசனமும் இருக்காது. எனினும், தமிழ்மொழி பேசுகின்றனவர்களின் கலாசாரத்தை கண்டறிந்து, அவ்வாறானவர்களையும் பொலிஸில் இணைந்துகொள்வதன் ஊடாக, இவ்வாறானப் பிரச்சினையை வெற்றிக்கொள்ளமுடியும். இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதன் பின்னர், தமிழ்மொழி பேசுக்கிற நிறையபேர் இணைத்துகொள்ளப்பட்டனர்.   இந்நிலையில், பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதற்கு, மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கவேண்டிய தேவையில்லை. பிரச்சினையை தேசிய பொலிஸினால் மட்டுமே தீர்த்துவைக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.