பெங்கமுவ, புஹுல்ஹேனே, வலகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து குழுவினர் 13 வயதுடைய பாடசாலை மாணவன், அவனது தாய், தந்தை உட்பட நால்வரை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெங்கமுவ, தன்ஹேன, புஹுல்ஹென்வலகட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று புதன்கிழமை (26) இரவு 9.00 மணியளவில் புகுந்த சிலரே தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய நால்வரையும் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்தை மூடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸின் 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவர்களில் தாயும் மகனும் ஆபத்தான நிலையில் காணப்பட்டதால், மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

