டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

250 0

டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்தும் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். தஞ்சை மாவட்ட கடல் பகுதி ஆழ்கடல் பகுதி கிடையாது. இதனால் மீனவர்கள் செலவு செய்து கடலுக்கு செல்லும் செலவு தொகைக்கே வருவாய் இல்லாமல் இழப்பை சந்தித்து வந்தனர். இந்நிலையில் திடீரென டீசல் விலை ரூ.1.80 விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவ சங்க தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: மீன்பிடித்தொழில் மழை இல்லாமலும், அடுத்த மாவட்ட ராட்சத விசைப்படகு மூலம் தங்கு கடல் மீன்பிடித்தொழில் செய்து வந்ததாலும் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் மிகவும் கடல்வளம் குறைந்து மீன்பிடித் தொழில் நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஒருமுறை கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவர 250 லிட்டர் டீசல், தளவாட உபகரணங்கள் ஐஸ், உப்பு, போன்ற பொருட்கள் ஆள் கூலி என ரூ.18 ஆயிரம் செலவாகிறது. அதற்கு மேல் வருவாய் வந்தால்தான் லாபம் கிடைக்கும்.

ஆனால் தற்போது ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தான் வருவாய் வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் வாட் வரியால் டீசல் லிட்டருக்கு ரூ 1.80 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் மேலும் இழப்பு ஏற்படும். எனவே டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறும் வரை இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இப்பகுதியில் ஏற்கனவே நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்