ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் ஒரேநாளில் சிறைபிடிப்பு

261 0

ஒரே நாளில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததோடு, 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.  நள்ளிரவில் பத்துக்கும் மேற்பட்ட கப்பல்களில்  ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை விரட்டியடித்தனர். 20க்கும் அதிகமான படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர்.

ராமேஸ்வரத்திற்கும் கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்த தங்கச்சிமடத்தை சேர்ந்த விண்ணரசு, டூதர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும், 15 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். இதேபோல் கச்சத்தீவுக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்த 9 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.சிறை பிடிக்கப்பட்ட 24 மீனவர்களும் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 57 நாட்களில் மொத்தம் 85 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 24 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர் குடும்பங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சரை மீனவர்கள் முற்றுகை: நாகை அக்கரைப்பேட்டையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிவாரணம் வழங்கினார். அப்போது இலங்கை அரசிடமிருந்து விசைப்படகை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அமைச்சரை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

மீனவர்களை மீட்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யும் போதெல்லாம், தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கிறது.

இந்த விவாகாரத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, வெளியுறவுத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 85 மீனவர்கள், பறிமுதல் செய்து வைத்துள்ள 128 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரிட்டன் ராணுவம் சிறைபிடித்த 32 குமரி மீனவர்கள்
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகேயுள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த 32 பேர், கடந்த மாதம் 5ம் தேதி கொச்சியிலிருந்து 2 விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 140 கடல் மைல் தொலைவில் இந்திய பெருங்கடலில் உள்ள  டிகோகார்சியா தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் பிரிட்டன் ராணுவ தளம் அமைந்துள்ளது. இதனால் பிரிட்டன் ராணுவத்தினர் மார்ச் 1ம் தேதி மீனவர்களை சிறை பிடித்தனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் வந்துள்ளது.

கச்சத்தீவு விழா புறக்கணிப்பு
ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர் பிரதிநிதிகள் அவசரக் கூட்டம் நேற்று தலைவர் போஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கடிதம் மட்டுமே எழுதி வரும் மாநில அரசையும், மீனவர்களின் பிரச்னையில் அக்கறை காட்டாத மத்திய அரசையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை முதல்  ஸ்டிரைக் செய்வது, கச்சத்தீவில் வரும் 11ம் தேதி நடைபெறும் அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்காமல் புறக்கணிப்பது, 85 தமிழக மீனவர்கள், 139 விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வரும் 11ம் தேதி ரயில் மறியில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.