ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் யாரும் தப்ப முடியாது ஜெயலலிதாவுக்கு எதிராக செய்த சதி என்ன? ஓபிஎஸ் வலியுறுத்தல்

274 0

சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு எதிராக செய்த சதி என்ன என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினமும் தன் இல்லத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று, திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் தலைமையில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 40 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை அமெரிக்கா அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதேபோல் ஜெயலலிதாவையும் அமெரிக்க அழைத்து செல்வோம் என்றேன். அதை சசிகலா ஏற்கவில்லை.

நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டனர். உதயகுமார் ஒரு அறிவாளி. சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தித்தனர். கடைசியாக போயஸ்கார்டனில் சசிகலாவை பார்க்க சென்றபோது அங்கு எம்எல்ஏக்களிடம் பேப்பரில் 3 கையெழுத்து வாங்கி கொண்டிருந்தனர். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்றனர். அது பாவம் என்று தெரிந்தே வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதித்தேன். டெபாசிட் வாங்காதவர் சிறப்பு பிரதிநிதி: கன்னியாகுமரியில் டெபாசிட் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை அவரெல்லாம்(தளவாய்சுந்தரம்) டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக செய்த சதி என்ன?: 2011ல் சசிகலா உள்பட அவர் குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா வெளியே  அனுப்பினார். அப்போது மன்னிப்பு கடிதம் கொடுத்த சசிகலா அதில்,  ‘’அக்கா(ஜெயலலிதா) உங்களுக்கு எதிராக என் குடும்பத்தினர் சதி செய்தனர் என்பது தற்போது தான் எனக்கு தெரிந்தது. இனி அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்  கொள்ள மாட்டேன். கடைசிவரை கட்சியில் எந்த பதவிக்கும் ஆசைப்பட மாட்டேன்  என்றார். அப்படி என்றால், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பத்தினர்  செய்த சதி என்ன? இதை சசிகலா தான் விளக்க வேண்டும்.
ஜெ.ஆன்மா சும்மா விடாது: கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டனர். அதில் நல்லவர்கள் மட்டும் என் பக்கம் வந்துவிட்டனர். அந்த 122 எம்எல்ஏக்களும் தற்போது நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர் குடும்பத்தினரே அவர்களை திட்டுகின்றனர்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா 122 எம்எல்ஏக்களை நிம்மதியாக இருக்க விடாது. பஜ்ஜி அமைச்சர்: திண்டுக்கல் சீனிவாசன் மிகப்பெரிய பொய் பேசி வருகிறார். 3 இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் என்கிறார். அவர் அப்போலோ மருத்துவமனையில் 2வது மாடிக்கு வந்ததே கிடையாது. வருவார் முதல் மாடியில் அமர்வார். ஜெயலலிதாவுக்கு உடல்நிலை எப்படி உள்ளது என்று கூட கேட்கமாட்டார். வருவார், செல்வார். அங்கே ஒரு பஜ்ஜி கொடுப்பார்கள். அதை வாங்கி சாப்பிடுவார். நிலைமை இப்படி இருக்க ஜெயலலிதாவை பார்த்தேன், பேசினேன் என்கிறார். இதையெல்லாம் கேட்டு, ஏன்டா என்ன கொன்றதும் இல்லாமல் என்னை பார்த்தேன்னு வேற சொல்றீயா என்று ஜெயலலிதா சொல்வது போல் இருக்கிறது.

மிகப்பெரிய புரட்சி ஏற்படும்: ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு 8ம் தேதி மாபெரும் உண்ணாவிரதம் நடத்துகிறோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆணையம் விசாரணை நடத்தினால் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் யாரும் தப்ப முடியாது. நீதி விசாரணை நடத்தி மர்மத்தை தெளிவுப்படுத்தவில்லை என்றால் மிகப்பெரிய புரட்சி தமிழகத்தில் ஏற்படும். உண்ணாவிரதத்தன்று மாலை 5 மணிக்குள் நீதிவிசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது என்ற செய்தி வரும் அளவுக்கு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.கே.நகரில் சசிகலா அணிக்கு கடைசி இடம்
நத்தம்விஸ்வநாதன் பேசுகையில், ‘ஆர்.கே.நகரில் சசிகலா அணி..அது அணி அல்ல பினி.. அணியோ, பினியோ அவர்கள் யாரை நிறுத்தினாலும் சுயேட்சை வேட்பாளர்களை விட குறைவாக கடைசி இடத்தை தான் பிடிப்பார்கள்’’ என்றார். அதிமுகவும், இரட்டை இலையும்
ஓபிஎஸ் வசம் வரும்

மாபா.பாண்டியராஜன் பேசுகையில், ‘’திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 15,525 அதிமுக நிர்வாகிகளும் ஓபிஎஸ் அணியில் இணைவார்கள். மனோஜ்பாண்டியன் ஜெயலலிதா மரணத்தில் 14 கேள்விகளை கேட்டார். அதை முன்வைத்து போராட்டம் நடைபெறும். டிடிவி.தினகரன் ஜெயலலிதாவால் 6 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தவர். அவர் ராஜ்யசபா எம்பியாக இருக்கும்போது கூட சபைக்குள் செல்ல கூடாது என ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அப்படிப்பட்டவரை சசிகலா இன்று துணை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார். சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்ற அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அதிமுகவும், இரட்டை இலையும் கண்டிப்பாக ஓபிஎஸ் வசம் வந்து சேரும்’’ என்றார்.