பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு: தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

269 0

* வாட் வரி 27ல் இருந்து 34 சதவீதமாக அதிகரிப்பு
* மக்களுக்கு எடப்பாடி அரசு கொடுத்த முதல் அடி
* கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் கண்டனம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எடப்பாடி அரசு பதவிக்கு வந்து 17 நாட்களில் அதிர்ச்சி தரும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளது.  பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாதத்திற்கு 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. மேலும் கலால் வரி என்ற பெயரில் மத்திய அரசு வரி போடுவதால்  பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது அதிகரிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் போது எல்லாம் தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக அரசும் பெட்ரோல், டீசல் விலை உயரும் போதெல்லாம் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும். எனவே, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் அறிக்கை விடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

வாட் கிடுகிடு: புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த 16ம் தேதி பதவியேற்றது. புதிய அரசு பதவியேற்று நேற்றுடன் 17 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் இந்த அரசு மக்களுக்கு அதிர்ச்சி தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது.  அதாவது, நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. அதே போல், டீசல் மீதான வாட் வரியை 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டது.  இதனால், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசு, டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் தமிழகம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்தது.

ரூ. 75ஐ தொட்டது: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.61ல் இருந்து ரூ.74.39 ஆக உயர்ந்தது. டீசல் லிட்டர் ரூ.60.73ல் இருந்து ரூ.62.49 ஆக உயர்ந்தது. இந்த திடீர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்கள் வழக்கமாக மாதத்துக்கு இரண்டு முறை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடும். ஆனால், எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி விலை உயர்ந்துள்ளது. நீங்களாக விலையை உயர்த்தி விட்டீர்களா? என்று பங்க் ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் “தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை உயர்த்தியுள்ளது. அதனால், தான் ெபட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது” என்று கூறினர்.

 மக்கள் அதிர்ச்சி: அதன் பிறகே வாகன ஓட்டிகளுக்கு விலை உயர்வுக்கான உண்மை விவரம் தெரிய வந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பார்த்து மாநிலம் முழுவதும் மக்கள் கொதித்து போய் உள்ளனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களின் வாடகை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் விவசாயம், மீன் பிடி தொழில், லாரி மற்றும் சுற்றுலா தொழில் உள்பட அனைத்து தொழில்களும் பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த விலை உயர்வு மக்களின் தலையில் பெரும் சுமையாக விழுந்துள்ளது. எனவே இந்த விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற ேவண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தலைவர்கள் கண்டனம்: அது மட்டுமல்லாமல் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராமதாஸ், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரி க்கைவிடுத்துள்ளனர்.

நிதிச்சுமையால் முடிவா?

வாட்(மதிப்புக் கூட்டு வரி) என்பது ஒரு சதவீதம் கூட குறையாமல் முழுமையாக மாநில அரசை சென்றடையும். அதில் வரி ஏய்ப்பு எதுவும் செய்ய முடியாது. எனவே இந்த வரி உயர்வு மூலம் தமிழக அரசு நிதிச்சுமையில் உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குடிமகன்களுக்கு அடுத்த ‘ஷாக்’
மத்திய அரசு வருகிற ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த உள்ளது. சரக்கு, சேவை வரி சட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டத்தில் அனைத்து விதமான வரிவிதிப்புகளும் சேர்ந்து விடும். பெட்ரோல், டீசல், மதுபானம் ஆகியவற்றின் வரிவிதிப்பு மட்டும் மாநில அரசு வசம் இருக்கும். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை சரிக்கட்டுவதற்காக பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

அதே போல் மதுபானங்களின் விலையையும் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்வால் ஏற்படும் எதிர்ப்பு, மதுபானங்களின் விலையை உயர்த்தினால் ஏற்படாது என்று தமிழக அரசு கருதுகிறது. இதனால், விரைவில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த இரண்டாவது அடி, குடிமகன்கள் பக்கம் திரும்புவதால் அவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.