ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அனைத்தையும் ஓ.பன்னீர் செல்வம் அறிவார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

207 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ. பன்னீர் செல்வதுக்கு முழுமையாகத் தெரியும் என்று தமிழக சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள், வேலூர் சிஎம்சி மருத்துவர்கள், மும்பை டாடா நினைவு மருத்துவமனை மருத்துவர்கள், பெங்களூரு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் புகழ்பெற்ற இதய மருத்துவர்களும், லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீல் ஆகியோர் நேரில் வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்

தமிழக அரசின் தலமைச் செயலாளர், அரசு ஆலோசகர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு இந்த குழு தினமும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளித்தது. இதில் ஓ. பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிக்கிச்சைகள் குறித்து விசாரணை நடத்த தற்போது கேட்டு வரும் ஓ. பன்னீர்செல்வம், அவ்வாறு விசாரணை வந்தால், முதல் நபராக அவர்தான் விசாரிக்கப்படுவார் என்பதை உணர வேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்தவொரு சந்தேகமும் இல்லை என கடந்த பிப்ரவரியில் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும், மாநில ஆளுநர்கள், அண்டை மாநில முதல்வர்கள், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த போது , பிரதாப் ரெட்டி தலைமையிலான மருத்துவர்கள் குழு அவர்களுக்கு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளித்த போது, ஓ. பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.