வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை வழக்கு விசாரணை – விமர்சித்த வடகொரிய தூதரை மலேசிய அரசு வெளியேற்றியது.

280 0

வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் கொலை வழக்கு விசாரணையை விமர்சித்த வடகொரிய தூதரை மலேசிய அரசு வெளியேற்றியது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம். இவர் கடந்த 13 ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பல வடகொரியர்களை மலேசிய காவல்துறை தேடி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், வடகொரியாவின் தூதர் காங் சோல் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கிம் ஜாங்-நாம் கொலை வழக்கின் விசாரணை குறித்து வடகொரிய தூதர் காங் சோல் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மலேசிய அரசு வலியுறுத்தியது.

ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் சார்பில் தூதரக அதிகாரி யாரும் நேரில் ஆஜராகி விளக்கமும் அளிக்கவில்லை.

இதையடுத்து வடகொரிய தூதரை வெளியேற்ற மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வடகொரிய தூதர் காங் சோல் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு வடகொரிய தூதரகத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி அனிஃபா அமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.