கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர் முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் இருக்கும் – கிழக்கு முதல்வர்

274 0
கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர் முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் இருக்கும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பரஸ்பர நட்புறவுடன் ஆக்கபூர்வமானதாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாங்கள் கிழக்கு மாகாண சபையிலே ஏற்படுத்தியிருக்கின்ற நல்லாட்சியின் பயன்கள், மாகாண சபையோடு மட்டும் நின்று விடாது, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களுக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்துள்ள இந்த நல்லாட்சி, கிழக்கு மாகாணத்திலே மக்கள் மனதில் பெரிய நெகிழ்வுத் தன்மையை வளர்த்துள்ளதோடு பரஸ்பர நட்புறவுக்கும் சமாதானத்திற்கும் இன ஐக்கியத்திற்கும் வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபையிலே ஏற்படுத்திய இனங்கள் இணைந்து கொண்ட நல்லாட்சியின் பயனாக அடையப் பெற்ற வெற்றியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிராக இருக்கப்போவதில்லையென அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.