இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம்- புதுக்குடியிருப்பு மக்கள்(காணொளி)

262 0

புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதுகுடியிருப்பு 682 ஆவது இராணுவப்படைப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்த ஒருபகுதி நிலம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் கையளிக்காத 11.25 ஏக்கர் நில வளாகத்தில் இராணுவத்தினரின் ஆயுத களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு-புதுகுடியிருப்பில் 682 ஆவது இராணுவ படையணியினர் புதுகுடியிருப்பு மக்களின் 19 ஏக்கர் காணிகளை 2009 ஆம் ஆண்டு அபகரித்தனர்.

இந்தக் காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து மீட்பதற்காக காணி உரிமையாளர்கள் 2012 ஆண்டு தொடக்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இறுதியில் 2017 பெப்ரவரி 03ஆம் திகதி புதுகுடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்னே கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஒருவார காலமாகியும் தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பொதுமக்கள் தமது போராட்டத்தின் நிலையை மாற்றி அமைத்தனர். இதன்படி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆராம்பித்தனர்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முல்லைத்தீவு இராணுவக் கட்டளை அதிகாரி பொதுமக்களின் காணிகள் படிநிலைகள் மூலம் மூன்று கட்டங்களாக விடுவிப்பு செய்ய தீர்மானித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதன்படி முதல் கட்டமாக நேற்று 7.75 ஏக்கர் காணிகளை பிரதேச செயலாளர் ம.பிரதீபன் காணி உரிமையாளர்களிடம் அரசாங்க அதிபர் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இந்த நிலையில் காணிகளில் மீள்குடியேறிய மக்களின் வாழ்விடப்பகுதியில் இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியம் ஒன்று ஏற்கனவே இருந்த நிலையில் அவை அகற்றப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த ஆயுதக் களஞ்சியம் விடுவிக்கப்படாத ஏனைய நிலங்களில் குறிப்பாக தமது வீடுகளுக்கு அருகில் அவை வைக்கப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் தவறுதலான வெடிப்பு நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.