ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்திற்கு 13 விமானங்களை குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு கடந்த ஆட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அந்தத் தீர்மானத்தை இரத்து செய்வதனால் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட இடைத்தரகர் நிறுவனங்களுக்கு இழப்பீடு செலுத்துவதில் பல மில்லியன் மோசடி செய்யும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டுபாய் வெளிநாட்டு நிறுவனததின் மூலம் 150 மில்லியன் டொலர் (22,950 மில்லியன் ரூபாய்) கடனாக பெற்றுக் கொள்வதற்காக பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசீமினால் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த யோசனை தொடர்பில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த யோசனை தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் விமானங்கள் பெற்றுக் கொள்வதென்றால், 154 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்த தீர்மானத்தை இரத்து செய்வதனால் இடைத்தரகர் நிறுவனங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 98.5 மில்லியன் டொலர் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது இலங்கை பணத்தில் 15,070 மில்லியன் ரூபாயாகும்.
இதேவேளை, குறித்த இழப்பீடு செலுத்துவது தொடர்பில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி பொருளாதார முகாமைத்துவ செயற்குழுவினால் 7.5 மில்லியன் டொலர் மற்றும் 8 மில்லியன் டொலருக்கு இடைப்பட்ட அளவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது விமானங்கள் கொள்வனவுக்கான இடைத்தரகராக “இன்டர்நெஷனல் லீஸ் பைனான்ஸ் என்ற நிறுவனமே செயற்பட்டது.. எனினும் பின்னர் அது “அர்பெக்” என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தேகத்திற்குரிய பல விடயங்கள் அமைச்சரவையின் யோசனைக்கு பின்னால் உள்ள நிலையில், கடந்த ஆட்சியின் போது இலங்கையிலிருந்து வெளிநாட்டில் வைப்பு செய்யப்பட்ட கறுப்பு பணத்தை டுபாய் நிறுவனத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

