தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று வவுனியாவில் பேரணியொன்றினை நடத்தியுள்ளது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் பேரணி புகையிரத நிலைய வீதி வழியாக கடை வீதியை அடைந்து ஹொரவப்பத்தானை வீதி வழியாக ஏ9 வீதியில் இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்தளத்தினை அடைந்தது.
சுமார் 300 பேர் வரையில் கலந்து கொண்ட இப்பேரணியில் எமது பிள்ளைகள் எங்கே?, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்?, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இந் நிலையில் 9 நாளாகவும் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தளத்தில் பேரணி அடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை பேரணியின் இறுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அவ் அமைப்பின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

